×

துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் சச்சின் பைலட்..: கட்சியில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் உள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் கோபமடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.  இதனால், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்ற அச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. தனக்கு 30 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக சச்சின் கூறி வருகிறார். ஆனால், டெல்லியில் மானேசர் ஓட்டலில் முகாமிட்டு இருக்கும் சச்சினுடன் வெறும் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் பாஜக.வில் சேருவாரா என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்திலும் இரண்டும் அமைச்சர்களுடன் மொத்தம் 18 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், எம்.எல்.ஏ.க்களை கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு தன் பக்கம் இழுத்த குற்றத்திற்காக சச்சின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

மேலும், காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு எம்.எல்.ஏ.கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து  இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ராஜஸ்தானின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Sachin Pilot ,Deputy Chief Minister ,party ,Rajasthan , Deputy Chief Minister, Sachin Pilot, Congress, Rajasthan, Politics
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...