சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.! காவல்துறையில் உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி (55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.ஐ.குருமூர்த்தி உயிரிழப்பை தொடர்ந்து சென்னை காவல்துறையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  மதுராந்தகத்தை சேர்ந்த குருமூர்த்தி சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ.குருமூர்த்தி மரணமடைந்தார். குருமூர்த்தி காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.

அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் 26-ம் தேதி குருமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா உறுதி செய்யப்பட்ட அவர் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து மாநகர காவல்துறையில் இதுவரை 4 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 55 வயதான குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகமாக கொரோனா பரவி வருவதால் உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் உலக மக்களின் பொதுவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பாதுகாப்பு இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே காவல்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. மும்பை  500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 4 ஆக  அதிகரித்துள்ளது. 

Related Stories: