×

தடுப்பூசி கண்டுபிடிப்பு மனித உடலில் செலுத்தி வெற்றிகர பரிசோதனை: ரஷ்ய பல்கலை அறிவிப்பு

மாஸ்கோ: சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 81 ஆயிரத்து 472 பேர்; இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 42 பேர். கொரோனா தாக்குதலில் தற்காத்துக் கொள்ள உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்து பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனாவை வெற்றி கொள்ள ஊரடங்கு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளன.

தனி மனித இடைவெளி, மாஸ்க் அணிதல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்து, மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்டமாக வெற்றி கண்டுள்ளதாக, ரஷ்யாவின் செச்னோவ் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக் கழக டிரான்ஸ்லேசனல் மெடிசின் மற்றும் பயோ டெக்னாலஜி இயக்குனர் வாடிம் டாராஸோவ் கூறுகையில், ‘‘கொரோனாவிற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து மனிதர்களுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பரிசோதிக்கப்பட்டவர்களின் முதல் குழுவினர் நாளையும், 2வது குழுவினர் இம்மாதம் 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்,’’ என்றார்.

இம்மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி  சோதனை செய்து பார்த்ததில், அவர்களுக்கு கொரோனாவை குணப்படுத்தும் எதிர்ப்பு  சக்தி உடலில் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. தடுப்பூசிக்கான மருந்தை ரஷ்யாவில் உள்ள ‘காமேலி இன்ஸ்டியூட் ஆப் எபிடெமியோலஜி மற்றும் மைக்ரோ பயாலஜி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து எப்போது சந்தைக்கு வரும் என உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ரஷ்ய பல்கலை.யின் இந்த அறிவிப்பு, மக்களுக்கு நிம்மதி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், கொரோனாவை குணப்படுத்த 21 தடுப்பு மருந்துகள் சோதனையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : university announcement ,Russian , Vaccine discovery, in the human body, injection, successful test, Russian University
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...