உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 23 தனியார் மருத்துவமனைக்கு தடை: சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை: கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து 23 மருத்துவமனைகளை நீக்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகளின் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் எத்தனை ஐசியு படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள், பொது வார்டு படுக்கைகள் உள்ளன என்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இதனை பார்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்றால், அவர்களுக்கு படுக்கை கிடைப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து 23 தனியார் மருத்துவமனைகளை இந்த பட்டியலில் இருந்து நீக்கி தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தேனி, கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஒசூர், தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், கடலூர், தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்கும் பட்டியல் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்த மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல மருத்துவமனைகளில் தனி நுழைவு மற்றும் வெளியேறும் பாதை இல்லை. நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதி இல்லை. போதுமான மருத்துவர்கள்,  ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களும் இல்லாத காரணத்தால் கொரோனா அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி அந்த மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

இது தொடர்பாக ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சுகாதார துறை அதிகாரிகள் எங்களது மருத்துவமனையை ஆய்வு செய்து பல பிரச்னைகளை கண்டறிந்தனர். எங்கள் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் 100 பேர் உள்ளனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என அரசிடம் தெரிவித்தோம். இதனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. விருப்பம் தெரிவிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றார். தமிழக சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் அஜய் யாதவ் கூறுகையில், ‘அனைத்து தனியார் மருத்துவமனைகளும், அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் மருத்துவமனையை தேடி  அலையக்கூடாது என்பதற்காக அரசின் இணையதளம் தினமும் புதுப்பிக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: