×

முகக்கவசத்தை பாதுகாப்பாக அணிகிறீர்களா? மருத்துவ நிபுணர் விளக்கம்

சென்னை: மாஸ்க் அணிவதை காட்டிலும் அதை பாதுகாப்பாக கையாள்வதே நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வழி என மருத்துவ நிபுணர் சாந்தி தெரிவித்துள்ளார். பெரும்பாலான மக்கள் முகக்கவசத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்ற அடிப்படை விஷயங்களை கூட தெரியாமலே பயன்படுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணிவது மட்டும் நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. பயன்படுத்திய முகக்கவசத்தை பாதுகாப்பாக கையாள்வதே நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்க வழியாகும். இதுகுறித்து மருத்துவ நிபுணர் சாந்தி கூறியதாவது:

சாதாரண துணி மாஸ்க்கை பயன்படுத்தினாலே போதும். துணி மாஸ்க் மூக்கையும், வாயையும் முழுவதும் மூடியவாறு தாடைவரையில் இருக்க வேண்டும். முடிந்தவரையில் இறுக்கமாக இருக்க வேண்டும். மாஸ்க்கை வெளியில் செல்லும் போது கண்டிப்பாக அணிய வேண்டும். அடிக்கடி கழட்டி மாட்டியபடி இருக்கக்கூடாது. வெளியே சென்று வீட்டிற்கு வரும் போது மட்டுமே மாஸ்கை கழட்ட வேண்டும். அதுவரையில் கழட்ட கூடாது. பெரும்பாலானோர் முகக்கவசத்தின் முன்பகுதியை கையால் தொடுகிறார்கள். இதை கட்டாயம் செய்யக்கூடாது. காதுக்கு பின்னால் மாட்டும் முடிச்சு பகுதியை மட்டுமே தொட்டு கழட்ட வேண்டும். மேலும், மாஸ்க்கை கழட்டிய பிறகு சட்டை பையிலோ, பேண்ட் பையிலோ வைக்கக்கூடாது.

இதேபோல், வெளியே சென்றுவிட்டு வந்தால் மாஸ்கை வீட்டிற்குள் எடுத்துவரக்கூடாது. வெளியே பக்கெட்டில் தண்ணீரில் துணிப்பவுடர்  கொட்டி அதில் மாஸ்க்கை போட வேண்டும். முகக்கவசத்தை மற்ற துணிகளுடன் போடக்கூடாது. தனியாகவே போட வேண்டும். ஒருவர் பயன்படுத்திய மாஸ்கை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது. அவர் மட்டுமே அந்த மாஸ்கை துவைத்து கையாள வேண்டும். ஒரு நபர் குறைந்தது 5 முதல் 7 வரையிலான எண்ணிக்கை கொண்ட மாஸ்கை வைத்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் போது மாஸ்க் அணியக்கூடாது. உடற்பயிற்சி செய்யும் போது மாஸ்க் அணிந்தால் மூச்சுவிடுவதில் பிரச்னை ஏற்படும். குழந்தைக்கு மாஸ்க் அணிவதை விட அவர்களை தனிமைப்படுத்துவதே சிறந்தது. மாஸ்க் ஈரமானாலோ, அழுக்கடைந்தாலோ அதை பயன்படுத்தக்கூடாது. ‘’எக்ஸ்பிரேட்டர்’’ வகை மாஸ்க்கை அணியக்கூடாது. இந்தவகையிலான மாஸ்க் மூலம் நமக்கு பாதிப்பு வராது. நம்மால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு வரலாம். பேசும் போது மாஸ்க்கை இறக்கிவிட்டு பேசக்கூடாது. சோப்பு நீரில் அரை மணி நேரம் மாஸ்க்கை போட்டு அதை ஊர வைப்பது கட்டாயம். நாம் மாஸ்க் அணிவதை காட்டிலும், அதை பாதுகாப்பாக அணிவதே முக்கியம்’.  பெரும்பாலானோர் முகக்கவசத்தின் முன்பகுதியை கையால் தொடுகிறார்கள். இதை கட்டாயம் செய்யக்கூடாது.

Tags : Specialist , Mask, safe, wear ?, Medical Specialist, Description
× RELATED இந்தியாவிலேயே முதன்முறையாக...