கஞ்சா கடத்திய இருவர் கைது

புழல்:  செங்குன்றம் அருகே ஜிஎன்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கொத்தவால்சாவடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் மடக்கிப்பிடித்து டிரைவரிடம் விசாரித்தனர்.பின்னர் ஆட்டோவுக்குள் சோதனை செய்தனர். அப்போது வெங்காய மூட்டைகளுக்கு நடுவே 21 பிளாஸ்டிக் பைகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டோவுடன் 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், சென்னை பெரம்பூர், ரமணா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஞானராஜ் (23), அவரது நண்பர் கொடுங்கையூர், என்விஎன் நகரை சேர்ந்த புருஷோத்தமன் (22) இருவரும் திருவிக நகரை சேர்ந்த ராஜேஷ் அளித்த தகவலின்பேரில், ஆந்திராவுக்கு சென்று ரூ.2.30 லட்சத்துக்கு கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனைக்கு வாங்கி வந்ததாக கூறினர்.இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 42 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

Related Stories: