திருப்போரூர் அருகே பொது இடம் ஆக்கிரமிப்பு விவகாரம் காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் பொது இடத்தில் பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தூப்பாக்கி சூடு நடந்தது. இது சம்பந்தமாக நேற்று முன்தினம் திமுக எம்எல்ஏ இதமயவர்மன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதில், நேற்று அதிகாலை இமயம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமாரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், பொது இட ஆக்கிரமிப்பு தொடர்பாகவும், திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஆதரவாகவும், நேற்று காலை செங்காடு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் தொடர்பான அனைவரையும் உடனடியாக கைது செய்வோம்’ என்றார். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சம்பவம் குறித்து செங்காடு பொதுமக்கள் கூறுகையில், கடந்த சனிக்கிழமை கூலிப்படையுடன் வந்து அந்த நிலத்திற்கு வழி ஏற்படுத்த முயற்சித்தார்.

உடனே, அதை கேட்க சென்ற எங்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அப்போது, ‘கூலிப்படையினரிடமிருந்து கிராம மக்களை காப்பாற்றுவதற்காக  எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். அதன் பிறகுதான் அந்த கூலிப்படையினர் ஓடினர். இல்லையென்றால் பொதுமக்களில் பல உயிர்கள் போயிருக்கும்’ என்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குமார் தரப்பை சேர்ந்த ரகுராமன் (59), சண்முகம் (42), ஜனார்த்தனன் (43) ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Related Stories: