துறைதோறும் பாதிப்பை ஏற்படுத்திய ஊரடங்கு இந்தியாவின் ஜிடிபிக்கு ரூ.14.88 லட்சம் கோடி இழப்பு

* டெக்ஸ்டைல் முதல் குறு, சிறு தொழில் வரை எதுவும் தப்பவில்லை

* மத்திய அறிவியல் அமைச்சக வெள்ளை அறிக்கையில் அம்பலம்

சென்னை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் ரூ.14.88 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது.

இவ்வாறு பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஜிடிபி 14.3 சதவீதம் வரை சரியும் எனவும், பாதிப்பு அதிகம் உள்ள டாப் 5 மாநிலங்களில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் அடங்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவுக்கு பிறகு மேக் இன் இந்தியாவில் செலுத்தப்பட வேண்டிய கவனம் என்பது தொடர்பாக தொழில்நுட்ப தகவல் கணிப்பு மற்றும் மதிப்பீடு கவுன்சில் ஆய்வு செய்திருந்தது. 84 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. இதனால், தேவையில் பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட, பொருட்கள் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுரங்கம், உற்பத்தி, கட்டுமானம், உணவு, பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் தேவை சரிந்துள்ளது. அதே நேரத்தில் விவசாயம், டெக்ஸ்டைல், மின் சாதனங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் துறைகளில் தேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

இருப்பினும் தேவை, தேவைகளுக்கு இடையிலான தொடர்பு, ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருள் தேவைக்கு சீனாவைத்தான் நம்பியுள்ளன. எனவே தான், சீனாவில் கொரோனா பரவல் தொடங்கிய போதே  இந்தியாவில் டெக்ஸ்டைல், ஆயத்த ஆடைகள், மருந்து உற்பத்தி ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆய்வறிக்கையின்படி, ஆட்டோமொபைல், சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை, கட்டுமானம், குறு சிறு மற்றும்  நடுத்தர தொழில்கள் துறைகள் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. சுமார் 11.4 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதில் 99 சதவீதம் குறுதொழில்கள் தான். ஆயத்த ஆடை மற்றும் டெக்ஸ்டைல் துறை ஜிடிபியில் 2 சதவீதம், ஆட்டோமொபைல் 7 - 8 சதவீதம், சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை 11.4 சதவீதம் ஜிடிபி பங்களிப்பை கொண்டுள்ளன. இவற்றுடன் ஒப்பிடுகையில் கல்வி, திறன், நிதித்துறை, உணவு மற்றும் விவசாய துறைகளுக்கு பாதிப்பு குறைவு தான் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* சீன சார்பு குறைந்தால் இழப்பை குறைக்கலாம்

கடந்த நிதியாண்டில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 5 சதவீதம். இவ்வாறு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து மாற வேண்டும். அதற்கேற்ப இந்தியாவில் உற்பத்தி செய்து தேவையை ஈடு செய்ய வேண்டும். இதற்கு மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு இறக்குமதி சார்பை குறைத்தால் மட்டுமே இழப்பு குறைய வாய்ப்புகள் உள்ளன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: