×

சபாஷ்... சரியான டெஸ்ட்! சங்கக்கரா பாராட்டு

லண்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே நடந்த பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டி, கொரோனா அச்சுறுத்தலை பின்னுக்குத்தள்ளி கிரிக்கெட் விளையாட்டை மீட்டெடுக்க உதவியுள்ளது என்று இலங்கை அணி முன்னாள் கேப்டன் சங்கக்கரா பாராட்டி உள்ளார். சவுத்தாம்ப்டன், ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்னும் எடுத்தன. 114 ரன் பின் தங்கியநிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 318 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், கடுமையாகப் போராடி 64.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றியை வசப்படுத்தியது.

சிறப்பாக விளையாடிய ஜெர்மைன் பிளாக்வுட் 95 ரன் (154 பந்து, 12 பவுண்டரி) விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வேகம் ஷனான் கேப்ரியல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் மான்செஸ்டரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த முதல் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான விளம்பரமாக அமைந்தது என்று நட்சத்திர வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

இலங்கை அணி முன்னாள் கேப்டன் சங்கக்கரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிரிக்கெட் மீண்டும் தொடங்கியதைக் கொண்டாட இதை விட பெரிய விளம்பரம் இருக்க முடியாது. ஜேசன் ஹோல்டர், பென் ஸ்டோக்ஸ் இருவருமே தாங்கள் சிறந்த கேப்டன்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர்’ என்று தகவல் பதிந்துள்ளார். சர் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி, டேரன் சம்மி, மைக்கேல் வாஹன், டாம் மூடி, டேனி மாரிசன், அஷ்வின், பிரையன் லாரா, விவிஎஸ்.லஷ்மண் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இந்த டெஸ்ட் குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.


Tags : Sangakkara , Well done , perfect test , Sangakkara, compliment
× RELATED இலங்கை முழுவதும் கலவரம்: கேப்டன் சங்ககரா குற்றசாட்டு