சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் மீது சிபிஐ கொலை வழக்கு பதிவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், எஸ்எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜா, போலீசார் சாமிதுரை, வெயிலுமுத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 10 பேரை கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் ஏற்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எப்ஐஆர் உள்ளிட்டைவ, சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்திருந்த இந்த வழக்கை சிபிஐ தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் மீதும் 302 (கொலை வழக்கு), 341 (சட்ட விரோதமாக அடைத்தல்), 201 (முக்கிய தடயங்களை அழித்தல்), 109 (குற்றத்தை தூண்டுதல், துணை போதல்) ஆகிய பிரிவுகளின் கீழ்  சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளியாக எஸ்ஐ ரகுகணேஷ், 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான எப்ஐஆர், நேற்று மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி தரப்பில் நேற்று கூடுதல் ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் நேற்று கோவில்பட்டி சிறைச்சாலை மற்றும் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.

* 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

கொலை வழக்காக மாறியதையடுத்து, இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நேற்று மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்தகுமார், இன்று காலை 11 மணிக்கு 5 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: