×

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நான் வழங்கும் ஆலோசனைகளில் கவனம் செலுத்தி கொரோனா பேரழிவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நான் வழங்கும் ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் உடனடியாக எடுக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தொடர் ஊரடங்கினால், மக்களுக்கு வாழ்வாதார இழப்பும்; வாழ்க்கையில் பெரும் பின்னடைவும்; மாவட்டங்களில் கடுமையான நோய்த் தொற்றும்; மக்களை, திரும்பிய பக்கமெல்லாம் சுற்றி வளைத்திடும் சோதனைகள் திரண்டு மிரட்டி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொறுப்புள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், மருத்துவ - பொருளாதார - தொழில்துறை வல்லுநர்களைக் காணொலிக் காட்சி மூலம் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துரைகளைக் கேட்டேன். அதில், ‘உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை’, ‘தொலை நோக்காக நிறைவேற்ற வேண்டியவை’ என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை, முதலமைச்சரின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்.

உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆலோசனைகள்:
1) ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினைச் சமாளிப்பதற்கு, ‘அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத்’’ தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.
2) ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த 1000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது பணமாக வழங்கப்பட வேண்டும்.
3) ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு  அனுமதிக்க வேண்டும்.
4) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும்.
5) ஏராளமான வணிக அமைப்புகள் மூடப்பட்டுள்ளன. பல செயல்பட இயலாமல் உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆதலால், கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்திட வேண்டும்.
6) அரசாங்கம் அதன் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும். இது பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு தற்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கும் உதவும்.
7) ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றி அமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிலுவைத்தொகை வர தாமதம் ஆவதால், கொரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.

தொலைநோக்கு பரிந்துரைகள்:
1) தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பொதுவான வருமான கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதன்மூலம் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை நிதிப் பாதுகாப்பை வழங்கிட முடியும்.
2) அனைவரும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே இலவச மருத்துவ வசதிகள் உள்ளதால், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிறந்த மருத்துவ வசதிகளை ஏழைகள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அரசு இலவச மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்பை வழங்கும். அது எதிர்கால நெருக்கடிகளின் போது அவர்களின் பிரச்னைகளைத் தணிக்க உதவும்.
கொரோனா நோய்த் தொற்றைக் குறைத்து- அந்த நோயை அறவே தமிழகத்தில் ஒழித்திடவும் - கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பின்னடைவுகளில் இருந்து மீண்டு - இயல்பு நிலை திரும்புவதற்கும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகள் மிகவும் ஆக்கபூர்வமானவை என்றே நான் கருதுகிறேன்.

ஆகவே, அவர்களுடைய ஆலோசனைகளை இந்த அறிக்கை வாயிலாக வெளியிட்டு இருக்கிறேன். எத்தனையோ ஆலோசனைகளை அவ்வப்போது தெரிவித்தும்கூட - “பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக என்ன சொன்னார் ஸ்டாலின்” என்று, வெறுப்பு - விரோதத்துடன் ‘’கொரோனா பேரிடர் நேரத்திலும்’’ காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதைத் தவிர்த்து - கருணை மிகுந்த அணுகுமுறையை வளர்த்துக் கொண்டு, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ள மேற்கண்ட ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கொரோனாவின் பேரழிவிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெறுப்பு - விரோதத்துடன் ‘’கொரோனா பேரிடர் நேரத்திலும்’’ காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதை முதல்வர் தவிர்க்க வேண்டும்.

Tags : MK Stalin ,Opposition ,Corona ,Tamil Nadu ,disaster , Leader of the Opposition, My Advice, Attention, Corona, Tamil Nadu, Save, Action, Chief, MK Stalin's Request
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...