பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்க திட்டம் உள்ளதா? தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட எதிர்ப்பு சக்தி உணவுகளை வழங்க ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வக்கீல் ஆர்.சுதா  தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கொரோனா தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த குடும்பங்களில் அரசு தரும் ஆயிரம் ரூபாயை நம்பியே வாழ்வாதாரம் உள்ளது. கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்குவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து உரிய பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: