×

ரயில் இயக்கம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் வேலைவாய்ப்பு பறிபோகுமா? மத்திய அரசின் முடிவால் இளைஞர்கள் அச்சம்

சென்னை: பயணிகள் ரயில் போக்குவரத்தில் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதால் சில வழித்தடங்களில் ரயிலை தனியார் இயக்க அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது. 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவால் தங்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதாக எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் அச்சமும் கவலையும் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் மிக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறை ரயில்வே. அரசுத்துறையில் பிற்படுத்தப்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவதற்கு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு இயக்கங்கள் ஆதரவளித்தன. இதன் விளைவாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

இதன் பலனாக எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைத்துள்ளது. ரயில்வேயின் 2017-18 நிதியாண்டு ஆண்டறிக்கையின்படி, நாடு முழுவதும் சுமார் 12.7 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 2.18 லட்சம் பேர் எஸ்சி பிரிவினர். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பள செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.18,500 கோடி. எஸ்டி பிரிவினரையும் கணக்கில் சேர்த்தால், ஆண்டு சம்பள செலவினம் சுமார் ரூ.26,000 கோடி. இதுகுறித்து ஆதி தலித் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ரயில்வே துறையில் சுமார் 2.18 லட்சம் கோடி தலித்துக்கள் பணியில் உள்ளனர். ஆண்டுக்கு ஏறக்குறைய இதே அளவு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். ரயில்வே தனியார் மயமாக்கப்படும் முடிவு காரணமாக இட ஒதுக்கீடு பறிபோகலாம். இதனால் 2050ம் ஆண்டில் ரயில்வேயில் தலித்துகளுக்கான வேலைவாய்ப்பு முற்றிலுமாக படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன” என்றார்.

அரசு துறைகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. தனியார் ரயில் இயக்க தொடங்கிவிட்டால் அவற்றில் இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் நியமனம் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப் படுகின்றனர். இதனால் சமூக அநீதி ஏற்படும். சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டு இருந்தாலும், அரசு துறைகளில் பதவி உயர்வு கிடைக்கும்போது சமூக அந்தஸ்து எளிதாக சாத்தியமாகிறது. எனவே, ரயில்வே தனியார் மயமாக்கல் முடிவு லாப நோக்கத்துடன் இயக்கப்படுவதால் மக்களுக்கு பாதகமாகவும், இட ஒதுக்கீடு மறுக்கப்படும் பட்சத்தில் சமூக அநீதியாக அமைந்துவிடும் என பிற்படுத்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்த பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : SC ,ST ,government , Rail movement, Private, SC, ST Fear of factions, job losses ?, federal government, youth
× RELATED பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்