×

விழியே... விடை எழுது...

நன்றி குங்குமம் தோழி

இருட்டு உலகில் உருவங்களை உணராமல், வண்ணங்களை அறியாமல், இருளை மட்டுமே சுவாசிக்கும் பார்வையற்றோர் சிலர், தங்கள் முயற்சியால் முயன்று, பொதுத்துறை வங்கிகள் நடத்தும், வங்கித் தேர்வான ஐ.பி.பி.எஸ்-ன் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்தகட்டத் தேர்வான, பிரதானத் தேர்வை வெற்றிகரமாக எழுதியுள்ளனர். கடந்த மாதம் இறுதியில் பெண்களும் ஆண்களுமாக பார்வையற்றோர் பதிமூன்று பேர் குழுவாக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்து ஐ.பி.பி.எஸ். வங்கித் தேர்வினை எழுதி மகிழ்ச்சியும் மனநிறைவுமாகச் சென்றனர்.

வங்கித் தேர்வென்பது முற்றிலும் இணையம் வழியாக, கணினி வழியே எழுதுவது. இதில் கம்ப்யூட்டர் கோடிங் பேப்பர் வழங்கப்படும். அதிலிருக்கும் வட்ட வடிவில் எச்.பி பென்சில் முனையில், சரியான விடையினை தேர்வு செய்து நிரப்ப வேண்டும். மேலும் அதற்கென வழங்கப்படும் மணிக்குள் விடைகளை முடித்தல் வேண்டும். முற்றிலும் மூளைக்கான வேலைதான் என்றாலும், சவால் நிறைந்த இந்தத் தேர்வை விழிக்குறைபாடு உடையோர் சந்திப்பது சாத்தியமா?

பண நடவடிக்கைகள் நிறைந்த, வங்கித் துறை பணி என்பது முற்றிலும் கணினி மயமானது. அதில் சிறு தவறு நிகழ்ந்தாலும் பணிக்கு  ஆபத்து. இதில் துணிந்து பணியாற்ற விழிக்குறைபாடுடையோர், நிறைவான பயிற்சியினை எப்படிப் பெறுகி றார்கள்? வங்கி நடவடிக்கைகளில் இவர்கள் இயல்பாக சக ஊழியரோடு இணைந்து, வாடிக்கையாளர்களின் தேவையினையும் பூர்த்தி செய்தல் சாத்தியமா போன்ற கேள்விகளோடு அவர்களை அணுகியபோது, அவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சியினை வழங்கி, அவர்களை நம்பிக்கையுடன் தேர்வெழுதத் தயார் செய்யும் அம்பேத்கர் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் இந்து நம்மிடம் பேசினார்.

“கோயம்புத்தூர் மண்டலத்தின் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பும்  (National Federation Of The Blind) மற்றும் அம்பேத்கர் பயிற்சி மையமும் இணைந்து நிகழ்த்தும் பார்வைக் குறைபாடுடையோருக்கான இப்பயிற்சி மையத்தில் பொறியியல் முடித்து, 2015ல் இருந்து பயிற்சியாளராக பணியில் இருக்கிறேன். நார்மல் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது என்பது வேறு. இவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது என்பது வேறு. கண்களால் பார்த்துப், பழகி கற்பதை, அவர்கள் தடவி, உணர்ந்து கற்கிறார்கள். இதில் பிறப்பிலே பார்வையின்மை, இடையில் இழந்தது என இரண்டு விதமான பார்வை இழப்பு உள்ளது.

பெரும்பாலும் கணக்குப் பாடத்தைப் போடுவதில் இவர்கள் புலியாக இருப்பார்கள். பேப்பர் பேனா வைத்துக்கொண்டு கால்குலேட்டரில் நாம் காணும் விடையினை, அவர்கள் மூளைக்குள் மனக்கணக்காகப் போட்டு விநாடிக்குள் விடை காண்பர். எவ்வளவு பெரிய எண்ணை டெசிமல் பாயின்டில் வைத்துக் கொடுத்தாலும் பக்காவாகப் போட்டு முடிப்பார்கள். ஒருங்கிணைப்புத் திறமைகள் அவர்களிடம் நிறையவே இருக்கும். பார்வை பாதிப்பால், மற்ற புலன்களை மிகவும் கூர்மையாகப் பயன்படுத்துவார்கள். பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிலும், கல்லூரி பாடத் திட்டத்திலும் நிறைய மதிப்பெண்களைப் பெற்றிருப்பார்கள்.

ஆசிரியர் வேலை மட்டுமே இவர்களுக்கு ஏற்ற பணி என்ற எண்ணத்தை பொது மக்கள் உருவாக்கி இருந்ததால், பெரும்பாலும் பட்ட மேற்படிப்போடு பி.எட் மற்றும் எம்.எட் முடித்தவர்களே இவர்களுக்குள் அதிகம் இருக்கிறார்கள். ஆசிரியர் வேலைக்கு டெட் தேர்வு மூலம் ஏற்பட்ட தடங்களால் இப்போது வங்கித் தேர்வு, டி.என்.பிஎஸ்ஸி தேர்வு, ஸ்டாஃப் செலக் ஷன் தேர்வு என அனைத்துக்கும் தயாராகத் தொடங்கிவிட்டனர். பார்வை இழப்புக் குறையை அவர்கள் பெரிதாக எப்போதும் எடுத்துக் கொள்வதில்லை. மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். ஜாலியாகவே அவர்களுக்குள் பேசி சிரிப்பார்கள்.

சத்தங்களை உள் வாங்குவதிலும், நடந்து கொள்வதிலும் மிகவும் நிதானமாக செயல்படுவார்கள். அடிக்கடி பயன்படுத்தும் இடங்களைக் கடப்பதில், அவர்களுக்குள் நிதானம் நிறையவே இருக்கும். விளையாட்டு, ஆடல், பாடல் என பல திறமைகளோடு திகழ்கிறார்கள். மனக்கஷ்டப்பட்டோ, தாழ்வுமனப்பான்மையுடனோ ஒரு நாளும் அவர்களை நான் பார்த்ததில்லை. அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் அவர்களுக்கு உதவும் மனப்பான்மையிலே இருப்பார்கள். முழுவதுமே பார்வை தெரியாதவர்களை பி1 எனவும், பாதி குறைபாடு உடையவர்களை பி2 எனவும் அவர்களுக்குள் அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

வினாக்களை உள்வாங்கி, விடையினை இவர்கள் சொல்ல சொல்ல தேர்வை உதவியாளர் கொண்டு எழுதவைப்பார்கள். இவர்களுக்கு ஸ்க்ரைப் என்று பெயர். வங்கித் தேர்வில், ரீசனிங் தேர்வை எழுத முழுவதும் கற்பனை வளம் வேண்டும். கணக்கைகூடப் போட்டு விடலாம். ரீசனிங்கில் அது முடியாது. பாடங்களை கை வைத்து சொல்லிக் கொடுத்தால்தான் அவர்களுக்கு புரியும். அவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களைத் தயார் செய்து தடவிப் பார்க்க வைத்து புரிய வைப்போம். மேக்னடிக் போர்ட் வாங்கி அதில் அவர்களை தொடச் சொல்லி, கற்க வைப்போம்”  என அவர்களுக்கு பயிற்சி வழங்கிய முறையினை விவரித்து முடித்தார்.

சங்கீதா
“எனது ஊர் திருப்பூர். எம்.ஏ.பி.எட். முடித்துள்ளேன். மூன்று வயதில் எனக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது. ப்ரெய்லி முறையில் படித்தேன். ப்ரெய்லி வழியாக எல்லா மொழியும் கற்கலாம். கணித பாடத்திற்கு ப்ரெய்லியில் தனியாக பயிற்சி இருக்கும். ப்ரெய்லில் நமது விரலைப் பிடித்து சொல்லித் தருவார்கள். வடிவங்களை விரலால் உணர்ந்து உள்வாங்கி படிப்போம். 4ம் வகுப்பு வரை வாய்மொழித் தேர்வு மட்டுமே இருக்கும். 5ம் வகுப்பில் இருந்து தேர்வெழுதத் துவங்குவோம்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தயாராக 9ம் வகுப்பிலிருந்து ‘ஸ்க்ரைப்’ பயன்படுத்தி தேர்வெழுத பயிற்சி வழங்குவார்கள். படிப்பில் நண்பர்கள் நிறைய உதவுவார்கள். அவர்களை சத்தமாகப் படிக்கவைத்து உள்வாங்கிக் கொள்வோம். பாடங்களை ஆடியோ வடிவில் பதிவு செய்து வைத்துக்கொள்வோம். எங்களுக்குத் தேவையானதை ப்ரெய்லியில் குறிப்பு எடுத்துக் கொள்வோம். கடந்த ஆண்டில் இருந்து எங்களுக்கு +2 தேர்வில் அரை மணிநேரம் அதிகப்படுத்தியுள்ளனர். வங்கித் தேர்வில் மற்றவர்களைவிட எங்களுக்கு 1 மணி நேரத்திற்கு 20 நிமிடங்கள் அதிகப்படுத்தியுள்ளனர்.”

பால்பாண்டி
“என் ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. கோயம்புத்தூர் வந்து பயிற்சி பெற்றேன். என்.எஃப்.பி மூலமாக பயிற்சி, தங்குமிடம்,உணவு எல்லாமே இலவசமாகவே தருகிறார்கள். முதன்மைத் தேர்வான பிரிலிமினரி தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம் இவற்றில் தேர்வு இருக்கும். மெயின் தேர்வில் மேலே உள்ளவையோடு, கரன்ட் அஃபையர்ஸ் மற்றும் பேங்க அவேர்னெஸ் தேர்வு இருக்கும்.’’

சதாசிவம், ஒருங்கிணைப்பாளர் என்.எஃப்.பி, கோயம்புத்தூர்
“வங்கி தொடர்பான பணப் பரிவர்த்தனை தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பார்வைக் குறைபாடுடையோரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். லோன் தொடர்பான டாக்குமென்ட் சரிபார்ப்பு, வங்கி நடவடிக்கைத் தொடர்பான விசாரணைக்கு வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் தருவது என மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கம்ப்யூட்டர் திரையில் கண்களால் பார்த்து மற்றவர்கள் செய்வதை நாங்கள் குரல் வழியாக வாய்ஸ் சாஃப்ட்வேர் மூலம் கேட்டு பணிபுரிகிறோம். எழுத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே அந்த மென்பொருள் படித்துக் காட்டும்.மொபைலிலும் டாக்கிங் ஆஃப் என ஒன்று உள்ளது. அந்த செயலி வழியாக யார் அழைத்தாலும் அவர்களின் பெயர் எங்கிருந்து அழைக்கிறார்கள் என்பதைச் சொல்லி விடும். மேலும் யாருடைய தொலைபேசி எண்களை எடுக்க வேண்டும் என்றாலும் அவர்களின் பெயரை மொபைலில் டைப் பண்ணும்போதே திரையில் வரும் பெயரை வாய்ஸ் அறிவித்து விடும். வாய்ஸ் வழியாக கைபேசியினைப் பயன்படுத்துவது மிகவும் சுலபமாக உள்ளது. இதே முறைதான் இணையத்திலும் எங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கோயம்புத்தூர் மண்டலத்தில்  ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய ஊர்களை இணைத்து எங்கள் பயிற்சி நிறுவனம் கோவையில் இயங்குகிறது. கனரா வங்கி, எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, ஆர்.பி.ஐ., நியு இந்தியா, யுனைட் இந்தியா இன்ஷூரன்ஸ், ரெயில்வே என அனைத்து அரசு பணிகளிலும் எங்கள் மையத்தில் பயிற்சி முடித்து தேர்வெழுதியவர்கள் பணியில் உள்ளனர்.

இதில் அதிகாரிப் பொறுப்பிலும் பலர் உள்ளனர். பெண்களும் இதில் அடக்கம். இப்போது 6 பெண்கள் 5 ஆண்கள் என மொத்தம் 11 பேர் வங்கித் தேர்வை சிறப்பாக முடித்து காத்திருக்கிறார்கள். அரசிடமிருந்து எதுவுமே எங்களுக்கு சுலபமாகக் கிடைப்பதில்லை. நிறைய போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள் மூலமே, எங்களுக்கான சலுகையினைப் பெற்றிருக்கிறோம். பார்வை இழந்தோர் ஆசிரியர் பணி மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலையினை மாற்றி, அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியோடு, எல்லா வேலைகளையும் எங்களாலும் செய்ய முடியும் என அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கி னோம், அதற்கான தகுதியினை மாணவர்களிடத்தில் வளர்த்தெடுக்கிறோம். அரசு மாற்றுத்திறனாளர்களுக்கு 4% இட ஒதுக்கீடு தருகிறது என்றால், அதில் பார்வை இழந்தோருக்கு 1%  வழங்குகிறது.’’

என்.எஃப்.பி (National Federation Of The Blind)
இது ஒரு தேசிய அமைப்பு. பார்வையற்றவர்களே, பார்வையற்றோருக்கு வழிகாட்டல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இது. பார்வை இழந்தோரின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை அனைத்திற்காகவும் செயலாற்றுகிறது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்குகிறது. அனைத்து மாநிலத்திலும், மண்டலம் வாரியாகவும் இதன் கிளை உள்ளது.

- மகேஸ்வரி

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!