பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் உண்மைக்கு மாறான செய்திகளை தெரிவிப்பதா? ஆவின் நிறுவனம் கண்டனம்

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆவின் நிறுவனத்தின் சார்பில் கடந்த 7ம் தேதி ஐந்து வகையான புதியபால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி, இந்த ஐந்து பொருட்களும் ஏற்கனவே சந்தையில் உள்ளன என்றும் ஆவின் நிர்வாகம் இந்த பொருட்கள் புதியவை என்று மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது என்று தவறான அறிக்கை ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது மற்றும் விஷமத்தனமானது. ஆவின் நிறுவனம், இதுவரை அதிக பட்சமாக 6 சதவீதம் கொழுப்புசத்து மற்றும் 9சதவீதம் இதர சத்தும் உள்ள பாலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இப்போது ஆவின் டீ மேட் என்ற புதிய வகை பால் 6.5 சதவீதம் மற்றும் 9 சதவீதம் புரத சத்துகொண்டது. இந்த பால் வர்த்தக ரீதியில் டீக்கடைகள், ஹோட்டல், சமையல் வல்லுநர்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விரும்பி பருகும் வகையில் சாக்லேட் மற்றும் மாம்பழ சுவைகளில் புதிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  வகையில் இஞ்சி, மஞ்சள், துளசி, சீரகம், பெருங்காயம், எலுமிச்சை, இந்துப்பு போன்ற மூலிகை பொருள்களை சேர்த்து இயற்கையான முறையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையின் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய வகை மோரை அறிமுகப்படுத்தியுள்ளது. பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் தினமும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு சுயவிளம்பரத்திற்காக, ஆவின் செயல்பாடுகளை குறை கூறுவதையே தொழிலாக கொண்டுள்ளார். தமிழக மக்களுக்காக ஆவின் நிறுவனம் இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலகட்டத்திலும் சிறப்பாக பணி செய்து வருகிறது.

Related Stories: