தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு பதிவு இயந்திரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்: இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை; தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தயாராக வைத்திருக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அதிமுக ஆட்சி அமைத்தது. அதற்கு அடுத்ததாக திமுக அதிக இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் காலம் வருகிற 2021ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. முன்னதாக ஒரு மாதத்திற்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அதனால் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விடும். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் கடந்த வாரம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறும்போது, “இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த வாரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதேபோன்று, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தமிழகத்திலும் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் என்பது பற்றி எந்த முடிவும் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை” என்றார். தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை. அதேபோன்று தமிழகத்தில் இன்னும் 10 மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்பதால், அதற்கு முன்னதாக காலியாக உள்ள 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Related Stories: