கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும். இதற்கான இணைய தளம் 2 நாட்களில் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 109  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த கல்வியாண்டின் செமஸ்டர் தேர்வு கொரோனாவால் நடக்கவில்லை. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டைப் பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரி வகுப்புகள் தொடங்க வேண்டும். இதனால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வந்து விண்ணப்பங்கள் பெற முடியாது.

அதனால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் ஏற்பாடுகளை உயர் கல்வித்துறை செய்து வருகிறது. இதற்கான இணைய தளம் ஒன்றையும் உயர் கல்வித்துறை தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து மென்பொருள்களையும், புதிய இணைய தளத்தையும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் செய்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்து இரண்டு நாட்களில் புதிய இணைய தளம் வெளியாகும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் இணைய தளமும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளனர்.

இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். ஒரேநேரத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் கவுன்சலிங் நடந்தால் மாணவர்கள் ஏதாவது ஒரு கல்லூரியில்தான் பங்கேற்க முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. தற்போது ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் வீட்டில் இருந்தே தாங்கள் விரும்பிய கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்ய முடியும். இதையடுத்து, தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் இதற்கான இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டுபோலவே இந்த ஆண்டும், தொழில் நுட்பக் கல்வி இயக்ககமே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் கவுன்சலிங்கை நடத்த உள்ளது. 

Related Stories: