சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு: சென்னை மண்டலம் 3ம் இடம் பிடித்தது

சென்னை: சிபிஎஸ்இயின் கீழ் நடத்தப்படும் 12ம் வகுப்பு தேர்வு  முடிவுகள் நேற்று வெளியானது. இதில் சென்னை மண்டலம் 3 இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த 12 லட்சத்து 3 ஆயிரத்து 595 மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதினர். அப்போது கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இடையில் தேர்வு நின்றது. இதனால் மற்ற தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் ஜூலை மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால், தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்களை மட்டும் திருத்தி தேர்ச்சி அறிவித்துவிட்டு மற்றவர்களுக்கு அகமதிப்பீட்டு படி தேர்ச்சியை அறிவிக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்தது. இதன்படி, நேற்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அறிவித்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 ஆயிரத்து 109 பள்ளிகளை சேர்ந்த 12 லட்சத்து 3 ஆயிரத்து 595 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 4,984 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி வரை நடந்தன.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 961 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 10 லட்சத்து 59 ஆயிரத்து 80 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 88.78 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அதிகம். சிபிஎஸ்இக்கான இந்த ஆண்டு தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் 97.67 சதவீத தேர்ச்சியை பெற்று நாட்டில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு மண்டலம் 97.05 சதவீதம் பெற்று

இரண்டாவது இடத்திலும், சென்னை மண்டலம் 96.17 சதவீத தேர்ச்சியை பெற்று நாட்டில் 3வது இடத்தில் உள்ளது.

தேர்வு எழுதியோரில் மாணவர்கள் 86.19 சதவீதமும், மாணவியர் 91.15 சதவீதமும், மாற்று பாலினத்தவர் 66.67 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.96 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளை பொறுத்தவரையில் மத்திய அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீதம் என்பது 94.94 சதவீதமாக உள்ளது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் 91.56 சதவீதமாக உள்ளது. மொத்த மாணவ மாணவியரில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 934 பேர் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து (13.24%)தேர்ச்சிபெற்றுள்ளனர். 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 38 ஆயிரத்து 686 பேர் (3.24%). அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுத வேண்டியவர்கள் 87 ஆயிரத்து 651 (7.35%)பேர்.

இந்நிலையில், மேற்கண்ட 12ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கான மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் இடம் பெயர் சான்று, திறனறி சான்று ஆகியவை மாணவர்களின் மொபைல் போனில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செயலிகள் அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கு ஏற்கெனவே சிபிஎஸ்இ சார்பில் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் Fail  என்று அறிவிப்பதற்கு பதிலாக Essnntial Repeat என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களுக்கான தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பதை மத்திய அரசு முடிவகளுக்கு பின் அறிவிக்கப்படும். அதேபோல விருப்ப தேர்வுகளும் எப்போது நடக்கும் என்பதும் அறிவிக்கப்படும். கொரோனா தொற்று பிரச்னை காரணமாக இந்த ஆண்டுக்கான மாணவர்கள் மெரிட் பட்டியல் வெளியிடப்படாது. மேலும், இந்த ஆண்டு தேர்வில் சுமார் 400 மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பீடுகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories: