இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் 5 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு: கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதிக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் இணையதள ராஜாவாக திகழும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். இவருடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை  நடத்தினார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் மோடி வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி அவரது  டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை, எனக்கும் சுந்தர் பிச்சைக்கும் இடையே மிகவும் பலனுள்ள சந்திப்பு நடந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினோம்.  

கொரோனா அவசர கால கட்டத்தில் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் வேலை செய்வது, விளையாட்டு உலகினையும் தொற்று எப்படி மாற்றி உள்ளது, தகவல் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, சுகாதாரப் பணிகளில் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவை பற்றி கலந்து ஆலோசித்தோம். அப்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் எனவும், இணைய குற்றங்கள், மிரட்டல்கள் வாயிலாக இணையத் தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும் எடுத்து கூறினேன்.

குறிப்பாக, இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தொழில்நுட்ப சக்தியை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். இந்தியாவின் ஆன்லைன் கல்வி கற்பித்தல், விளையாட்டு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் ஆகிய துறைகளில், விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மெய்நிகர் தன்மை, தாய்மொழி பயன்பாட்டுடன் கூடிய தொழில்நுட்ப தீர்வு காணுதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பரிசீலித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதன் பிறகு, இந்தியாவுக்கான கூகுள் ஆறாவது ஆண்டு பதிப்பு நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரை நிகழ்த்திய சுந்தர் பிச்சை, ``பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளினால், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வலுவான அடித்தளம் அமைத்து போரிட்டு வருகிறது. இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதிக்கு அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகம் ஒன்று தொடங்கவும் கூகுள் திட்டமிட்டு உள்ளது, என்று கூறினார்.

Related Stories: