×

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நிர்வாக உரிமை மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை கொண்டுள்ள உலகப் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. ‘கோயிலின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே உள்ளது,’ என அது அறிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயில், உலகப் புகழ் பெற்றது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அரச குடும்பத்தின் நிர்வாகத்தில் இருந்த பெரும்பாலான கோயில்கள் தேவஸ்தான போர்டுக்கு மாற்றப்பட்டன. ஆனால், பத்மநாப சுவாமி கோயில் மட்டும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் நிர்வாகத்தில் இருந்து வந்தது.

இக்கோயிலில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருவதற்கு ஆரம்பம் முதலே பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், கோயிலின் கருவூலங்களைத் திறந்து புகைப்படம் எடுத்து ஆல்பம் தயாரிப்பதை எதிர்த்து 2007ம் ஆண்டு சுந்தர்ராஜன் என்பவர் உட்பட 2 பக்தர்கள், அரச குடும்பத்திற்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருநபர் அடங்கிய வழக்கறிஞர் ஆணையத்திடம் கோயிலை ஒப்படைக்க வேண்டும் எனவும், குருவாயூர் கோயிலைப் பின்பற்றி புதிய நிர்வாக முறையை கடைப்பிடிக்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், முதலில் மன்னர் குடும்பத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், பின்னர் கோயிலை நிர்வகிக்க அறக்கட்டளை தொடங்கும்படி கேரள அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மன்னர் குடும்பத்தினர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் யு.யு.லலித், சந்தான கவுடர் மற்றும் வினித் சரண் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிப்பது, பாதாள அறையை திறப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில் (திருவிதாங்கூர் மன்னர் குடும்பம்) தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்கிறது. இதில், ஏற்கனவே கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், கோயிலை நிர்வகிக்க,  நிர்வாகத்துக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது. இருப்பினும், கோயிலை கண்காணிக்க மாவட்ட நீதிபதியின் தலைமையில் குழு ஒன்று அமைக்க வேண்டும்.

மேலும், கோயிலில் உள்ள பாதாள அறையை திறப்பது, முன்னதாக எடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது தொடர்பாக நிர்வாகத்தின் தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டாலும், இப்போது உருவாக்கப்பட்ட குழுவிடம் தெரிவிக்க வேண்டும். இதைத்தவிர பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணித்து அது தொடர்பான அறிக்கையையும் புதியதாக உருவாக்கப்படும் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், பத்மநாபசுவாமி கோயிலின் அனைத்து அதிகாரங்களும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே உள்ளது என மீண்டும் உறுதியாகி உள்ளது.

* தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவு
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சரேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரே நிர்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கேரள அரசு  வரவேற்கிறது. இந்த உத்தரவு கேரள அரசுக்கு எந்த நெருக்கடியையும்  ஏற்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கேரள  அரசு அமல்படுத்தும்,’’ என்றார்.

* ‘இந்துக்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்’
பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அதிகாரம் அனைத்தும் திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு மட்டுமே இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள போதிலும், அதை கண்காணிக்க மாவட்ட நீதிபதியின் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த குழவில் இடம் பெறும் அனைவரும் கண்டிப்பாக இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court ,Trivandrum Padmanabhasami , Thiruvananthapuram, Padmanabhasami Temple, Administrative Rights, Royal Family, Ownership, Supreme Court
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி...