லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை

லடாக்: லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் ராணுவ வீரர் களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதன்பின் கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரி கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக் கொண்டது. கல்வான் பள்ளத் தாக்கில் முதலில் பின்வாங்கிய சீன வீரர்கள், அடுத்த சில நாட்களில் மீண்டும் அதே பகுதியில் முகாமிட்டனர். இதன் காரணமாக கடந்த 15-ம் தேதி இருநாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அந்த பேச்சுவார்த்தை முடிவில், இருநாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து விலகி சென்றது. இதனால் அங்கு நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது. இந்நிலையில், நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. எல்லையில் நடந்த மோதலுக்கு பின், ராணுவ தரப்பில் இது நான்காம் பேச்சுவார்தையாகும். இந்த பேச்சுவார்த்தையில் இருநாடும் ராணுவ படைகளை மேலும் விளங்கிக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: