×

நீதி கிட்டுமா ?..சாத்தான்குளம் தந்தை மகன் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..!!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் 302, 341, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. முக்கிய குற்றவாளியாக எஸ்.ஐ ரகுகனேஷ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு கடந்த மாதம் 19-ம் தேதி இரவு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர்.  

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரைப்படி சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. சாத்தான்குளம் வழக்கை விசாரிப்பதற்காக சிபிஐ கூடுதல் எஸ்.பி-யான விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், ஏட்டு அஜய்குமார் காவலர்கள் சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த வழக்கில் கைதான போலீஸாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று சிபிசிஐடி மற்றும் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் போலீசார் மீது 302,341,201,109 ஆகிய கொலை வழக்குக பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

Tags : Sathankulam ,CBI ,murder ,death , Justice, Satankulam, Father, Son, CBI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...