×

கலம்காரி இஸ்லாமியர்களின் கலை

நன்றி குங்குமம் தோழி

கலம்காரிதான் இன்றைய ட்ரெண்ட். பத்தில் இரண்டு பெண்களாவது கலம்காரி டிசைனிலான ஆடை உடுத்தியிருப்பதை நாம் பார்க்க முடியும். புத்தரின் கண் மூடிய‌ தவமுகம், கண் திறந்த புத்தர், இறைவிகளின் வதனம், இயற்கைக்காட்சிகள், வண்ண வண்ண மலர்கள் என பற்பல கலம்காரி டிசைன்கள் இன்றைக்கு விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. புதிதாக அறிமுகமாகியிருக்கும் டிசைன் போல என்றுதான் கலம்காரியை பலரும் நினைக்கின்றனர். ஆனால் இதற்குப் பெரும் பூர்வீகமே இருக்கிறது. பாரம்பரியமான இந்த டிசைன் திடீரென இப்போது ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த டிசைனுக்கான வரவேற்பு கூடிக்கொண்டே போகிற இச்சூழலில் இதன் பூர்வீகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆடை வடிவமைப்பாளர் ரேகா ராகுலிடம் கேட்டேன்.

‘‘கலம்காரி என்பது பெர்சிய மக்களால் உருவாக்கப்பட்ட ஓவியக்கலை. முகலாயர்கள் நமக்கு அளித்துச் சென்ற கலைகளில் இதுவும் ஒன்று. கலம்காரி என்பது பெர்சிய சொல். கலம் என்றால் தூரிகை, காரி என்றால் ஓவியர் என்பதே இதன் பொருள். பேனா வடிவில் மூங்கிலை அமைத்து இயற்கையான சாயங்களைக் கொண்டு வரையப்பட்டதுதான் கலம்காரி. தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றைத்தான் சாயமாகப் பயன்படுத்தினார்கள்.

இஸ்லாமியர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது என்பதால் இயற்கைக் காட்சிகளையே வரைந்தார்கள். முதலில் விலங்குகளின் தோலில்தான் வரைந்தார்கள். கை போன போக்கில் வரைந்து கொண்டே போவார்கள். அதன் அடுத்தகட்டமாக அவர்களின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை வரைந்தார்கள். திரைச்சீலைகள், விரிப்புகள் ஆகியவற்றில்தான் இந்த ஓவியங்கள் வரையப்பட்டது. இப்படியாக உருவான கலையை முகலாயர்கள் ஆட்சி செய்த பகுதிகளுக்கெல்லாம் கொண்டு சென்றார்கள். முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இக்கலை இங்கு பரவியது.

இக்கலையின் தொழில்நுட்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டது. இந்தியாவில் பெரும் பான்மையானோர் இந்துக்கள் என்ப தாலும் உருவ வழிபாடு கொண்டவர்கள் என்பதாலும் கடவுளர்களின் படங்கள், ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண புராணம் ஆகியவற்றையெல்லாம் வரைய ஆரம்பித்தார்கள். தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் சாறு கருமை நிறங்கள் கொண்டதாகவே இருக்கும். அதனைக் கொண்டு வெண்மை நிற துணியில் வரைய ஆரம்பித்தார்கள்.

கையில் வரைந்ததன் அடுத்த கட்டமாக ப்ளாக் ப்ரின்டிங், ஸ்கிரீன் ப்ரின்டிங் ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டு இப்போது மெஷின் ப்ரின்ட் வரை வந்திருக்கிறது. தற்போது முழுவதும் டிஜிட்டல்மயமாகி விட்டதால் அதன் உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது’’ என்றவரிடம் டிசைன்கள் எவ்வாறாக வடிவமைக்கிறார்கள் என்றேன். கடவுளுக்கான பொதுவான வடிவங்களை க்ரியேட்டிவிட்டியால் மாற்றி வடிவமைக்கிறார்கள். அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களும் ப்ரின்ட் செய்யப்படுகின்றன. முகலாய சாம்ராஜ்யத்திலிருந்து கலம்காரி நடைமுறையில் இருக்கின்றதுதான். அது திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளில்தான் இருந்தது. ஆடைகளில் இந்த டிசைன் வர ஆரம்பித்து சில பத்தாண்டுகள்தான் ஆகின்றன. கலையாக இருந்தது தற்போது வணிகமாக மாறி விட்டது.

முன்பு இயற்கை சாயங்களில்தான் இந்த டிசைனை வரைவார்கள் அல்லது ப்ரின்ட் செய்வார்கள். இப்போது கெமிக்கல் சாயம்தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கிறது. அதிலும் அன்ட்ரீட்டட் மெட்டீரியல்தான் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. இந்த மெட்டீரியல் எளிதில் சாயம் போய் மங்கி விடும். ட்ரீட் செய்யப்பட்ட மெட்டீரியலை வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது. காட்டன் துணிகளில்தான் முதலில் கலம்காரி டிசைன் வர ஆரம்பித்தது. சீனப் பட்டின் வருகைக்குப் பிறகு சிந்தடிக் மற்றும் பட்டுத்துணிகளிலும் இந்த டிசைன் ப்ரின்ட் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளிலேயே கலம்காரி டிசைனை ப்ரின்ட் செய்கிறார்கள்.

அதிலும் டிசைனுக்கு மேல் எம்பிராய்டரி செய்வதுதான் இன்றைக்கு மேரேஜ் ட்ரெண்டாக இருக்கிறது. எம்பிராய்டரி செய்த பின் அது முப்பரிமாண ஓவியம் போல இருக்கும். ஒரு பெண்ணின் ஓவியம் ப்ரின்ட் செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான உடை மற்றும் அணிகலன்களில் எம்பிராய்டரி செய்வார்கள். பட்டுப்புடவை மட்டுமல்லாமல் கேரளத்தின் வெள்ளைப் புடவைகளிலும் இது போன்ற எம்பிராய்டரி செய்யப்படுகிறது. ஒரு டிசைனில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் எம்பிராய்டரி போட்டு தனித்துக் காட்டும் எம்போஸிங் வேலைப்பாடுகளும் செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் ஓவியத்தில் மூக்குத்திக்கு மட்டும் எம்பிராய்டரி செய்து அதை தனித்துக் காட்டுவது. நாளுக்கு நாள் புதிய டிசைன்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது’’ என்கிறார்.

அதிகம் விற்பனையாகும் டிசைன்கள் எது? ‘‘கடந்த ஆண்டு புத்தர் டிசைன்தான் ட்ரெண்ட் ஆக இருந்தது. விற்பனையில் படுஜோராக இருந்தது அந்த டிசைன்தான். ஜிமிக்கிக் கம்மல் பாட்டு ஹிட்டடித்ததற்குப் பிறகு ஜிமிக்கிக் கம்மல் டிசைன் அதிகம் விற்பனையானது. மணமகன் - மணமகள், மணப்பெண்ணை பல்லக்கில் தூக்கி வருவது போன்ற டிசைன்கள் திருமணப் புடவைகளில் அதிகம் விற்பனையானது. கோடைகாலம் வரப்போவதால் கலம்காரி காட்டன் விற்பனை அதிகரிக்கும். அதற்கான உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. இயற்கைக்காட்சிகள், பறவைகள் போன்றவற்றை கூல் டிசைன்ஸ் என்று சொல்கிறோம்.

அந்த டிசைனுக்கான வரவேற்பு கோடையில் அதிகமாக இருக்கும்’’ என்றவரிடம் பாரம்பரியமான உடைகளில் மட்டும்தான் கலம்காரி டிசைன் ப்ரின்ட் செய்யப்படுகிறதா? என்றதற்கு..‘‘வெஸ்டர்ன் கவுன், வெஸ்டர்ன் ஸ்கர்ட் மற்றும் கம்மீஸில் கூட கலம்காரி டிசைன் வந்து விட்டது. கம்மீஸிலேயே முட்டி வரை இல்லாமல் கால்வரை நீண்ட காட்டன் கம்மீஸ்களில் கலம்காரி டிசைன் வருகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஃப்ளோரல் ஷர்ட் கலம்காரி ப்ரின்டில் கிடைக்கிறது. அன்ட்ரீட்டட்  மெட்டீரியல் மீட்டர் 80 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. ட்ரீட் செய்யப்பட்ட மெட்டீரியலின் விலை 150 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

இயற்கைச் சாயத்தின் மூலம் ப்ரின்ட் செய்யப்பட்ட மெட்டீரியலின் விலை 250 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 220-250 ரூபாயில்தான் நல்ல மெட்டீரியல் கிடைக்கும். இயற்கை சாயம்தான் சிறந்தது என்றாலும் அது கொஞ்சம் விலை அதிகம்தான். இயற்கை சாயத்தின் மூலம் ப்ரின்ட் செய்யப்பட்ட புடவையின் விலை 2,250 ரூபாயிலிருந்துதான் தொடங்குகிறது. இயற்கை சாயத்தைப் பற்றி புரிந்து கொண்டு அதனை விரும்புகிறவர்கள் மட்டும்தான் அதனை வாங்குகிறார்கள். இன்னமும் கையால் வரைவதும் இருக்கிறது. ஆனால் அதன் விலை உயர்வானதாக இருக்கும்’’ என்கிறார் ரேகா ராகுல்.

சென்னையில் எழும்பூரில் இருக்கும் பான்தியன் சாலையில் இருக்கும் காட்டன் தெருதான் கலம்காரிக்கு பெயர்போனது. அந்தத் தெரு முழுவதும் உள்ள கடைகளில் குறைந்த விலைக்கு கலம்காரி ரெடிமேட் மற்றும் மெட்டீரியல் கிடைக்கிறது. அவற்றுள் ஒரு கடையின் உரிமையாளர் பிரபுவிடம் கலம்காரி விற்பனை பற்றிக் கேட்டேன். ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை விட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவங்களும்தான் இதை விரும்பி வாங்குறாங்க. ரொம்ப காலமா கலம்காரி இருக்குனாலும் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் நல்லா விற்பனையாகுது. மெட்டீரியல் மீட்டர் நூறு ரூபாய்க்கும் குறைவாக விற்கிறோம். ரெடிமேடில் சைட் கட் டாப் 300 ரூபாய், அம்பர்லா டாப் 400 ரூபாய்னு விற்குறோம். பளாசோ பேன்ட் நல்லா விற்பனையாகுது. குர்த்தீஸ்  அதிக விற்பனையில்  இருக்கிறது’’ என்கிறார் பிரபு.

- கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.கோபால்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!