மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50% இட ஒதுக்கீடு:

இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு  பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ  படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

உச்சநீதிமன்றம் மறுப்பு:

இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில்  தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

இதனையடுத்து, ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2-ம் தேதி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்ப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணும் மருத்துவப்படிப்பில் இடஒதுக்கீடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்தப்பின்  தமிழக அரசின் மனுவை விசாரிக்க வேண்டும் என்றனர். தமிழக அரசு சார்பில், அந்த பெண் தொடர்ந்த வழக்கு உச்சதிரப்பிரதேச மாநிலத்திற்கான உரிமை. தமிழ்நாட்டிற்கு தொடர்பு இல்லை என்று வாதிட்டனர். இதனையடுத்து வழக்கின்  விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு:

இந்நிலையில், மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உத்திரப்பிரதேச பெண் தொடர்ந்த வழக்கிற்கும்,  தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இட ஒதுக்கீடு வழங்கக்கோரி  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுமா? இல்லை தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யுமா? என்பது விரைவில் தெரியவரும்.

Related Stories: