நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது!!

டெல்லி : நடப்பு 2020-2021 நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை தமிழக அரசு ரூ.30,500 கோடி கடனாகப் பெற்றுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்பை விட அதிகமாகும். தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ரூ.25,000 கோடி கடன் பெற்றுள்ளது. தமிழக அரசிற்கு ஒரு மாதத்திற்கு பெட்ரோல் - டீசல் மதிப்பு கூட்டு வரி, டாஸ்மாக் வருவாய், ஜிஎஸ்டி மாநில பங்கு ஆகியவற்றின் மூலம் ரூ.13,000 கோடி அளவிற்கு சராசரியாக கிடைக்கும். ஆனால் கடந்த 3 மாதங்களாக கொரோனா பொது முடக்கத்தால் இந்த வருவாய் பெருமளவு சரிந்துள்ளது.

இதனை ஈடுக்கட்டவே மாநில அரசு கடன் வாங்குவதை அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.64,208 கோடி, ஓய்வூதியதாரர்களுக்கான தொகை ரூ.32,000 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் கடன் 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருக்கும் நிலையிலும் ஜிடிபி என்று சொல்லக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவதும் தமிழகம் வரும் காலங்களில் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்திக்க வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அண்மையில் முதல்வர் அளித்த பேட்டியில் இந்த நிதியாண்டில் அரசின் நிதி பற்றாக்குறை ரூ.85,000 கோடியாக இருக்கும் என்று தெரிவித்து இருப்பதால், கடன் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: