பிரிமியம் ரூ.450ல் தொடங்குகிறது ‘கொரோனா கவசம்'பாலிசி வந்தாச்சு: காப்பீடு பலன் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும்

புதுடெல்லி: கொரோனா கவசம் பாலிசியை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய துவங்கியுள்ளன. இந்த குறுகிய கால பாலிசி பிரிமியம் ரூ.447 முதல் தொடங்குகிறது. இதன் மூலம் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப் படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கொரோனா சிகிச்சைக்காக தனியாக காப்பீடு கொண்டு வர வேண்டும்  என வலியுறுத்திய இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம், கொரோனா கவசம் பாலிசி கொண்டுவர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.

இந்த காப்பீடு மூன்றரை மாதங்கள், ஆறரை மாதங்கள் மற்றும் ஒன்பதரை மாதங்கள் கொண்டதாக இருக்கும். இதற்கான காப்பீடு பிரிமியம் தொகைக்கேற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை இருக்கும். மருத்துவமனை செலவுகள் மட்டுமன்றி மருத்துவமனைக்குச் செல்வதற்கு முந்தைய மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவது, வீட்டு தலைமையில் சிகிச்சை பெறுவது தொடர்பாகவும் இந்த காப்பீடு மூலம் பயன் பெறலாம். ஆம்புலன்ஸ் செலவும் இதில் அடங்கும். பாலிசி எடுத்து 15 நாட்களுக்கு பிறகு அப்படி பலன்கள் கிடைக்கும். ஆயுஷ் சீதைக்கும் இந்த காப்பீடு உண்டு.

இந்த காப்பீடுகளை விற்க 29 காப்பீடு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி காப்பீடு பிரீமியம் தொகை குறைந்தபட்சமாக 447 ரூபாய் முதல் தொடங்குகிறது. குறைந்தபட்சம் ரூ.50000  வரை இதில் காப்பீடு பெறலாம். 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த பிரிமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்பதரை மாதமாக இருந்தால் பிரீமியம் தொகை ரூ.745. 5 லட்சம் ரூபாய் காப்பீடுக்கு பிரீமியம் தொகை ரூ.1320. 60வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் பிரீமியம் தொகை ரூ.5630 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், தற்போது இந்த பாலிசிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தொற்றுப் பரவல் நிலையை கருத்தில் கொண்டு பிரீமியம் தொகை மறு மதிப்பீடு செய்யப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் இது பாலிசிக்கு தேவையிருக்காது. இதுதவிர குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு குழு காப்பீடும் உள்ளது என்றார்.

Related Stories: