×

அறநிலையத்துறையில் திருப்பணி குழுவின் ஒப்புதல் இல்லாமல் 100 ஆண்டு பழமையான கிராம குல தெய்வ கோயில்களில் திருப்பணி செய்ய தடை

* கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் தவிப்பு
* அதிகாரிகளின் முரணான அறிவிப்பால் சிக்கல்

சென்னை: அறநிலையத்துறை திருப்பணி குழுவின் ஒப்புதல் இல்லாமல் 100 ஆண்டுகள் பழமையான கிராம குல தெய்வ கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள கூடாது என்று அறநிலையத்துறை கெடுபிடி காட்டி வருகிறது. இதனால், கும்பாபிஷேகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 4 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதை தவிர்த்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குல தெய்வ கோயில்கள் உள்ளன. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. முன்னதாக அந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள் இருக்கிறது என்றால் அந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள உயர் நீதிமன்றம் நியமனம் செய்த திருப்பணி குழு மூலம் அனுமதி பெற வேண்டும். இது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் என்றால் தொன்மையான சிற்பங்கள் இருப்பதால், அந்த கோயில்களில் பழமை மாறாமல் புதுப்பிக்க இந்த குழுவினரிடம் அனுமதி பெறலாம். ஆனால், குல தெய்வ கோயில்களில் அது போன்ற சிற்ப வேலைபாடு கொண்டு அமைக்கப்படவில்லை. ஆனால், அந்த கோயில்களில் திருப்பணி செய்ய வேண்டுமென்றால் இக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், பெரும்பாலான குல தெய்வ கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது என்பது சிரமமாக உள்ளதால், கும்பாபிஷேகம் நடத்த முடியாத சூழல் உள்ளது.

இது குறித்து கிராமபூசாரிகள் சிலர் கூறும் போது, ‘100 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வாங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை மனதில் வைத்து கொண்டு கிராம குல ெதய்வ கோயில்களுக்கு கூட திருப்பணி மேற்கொள்ள உயர் நீதிமன்ற குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகின்றனர். போதுமான தெளிவு இல்லாததால் அதிகாரிகள் இது போன்று கூறுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : village temples ,restoration committee , Charitable Trusts, Restoration Committee, Approval, 100 Years Old, Grama Kula Deva Temple, Restoration, Prohibition
× RELATED 1,250 கிராம கோயில்களின் திருப்பணிக்காக 25...