தொட்டி இருக்கு... தண்ணி இல்ல...

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட கைப்பம்புகள், சின்டெக்ஸ் தொட்டிகள் காட்சிப்பொருளாக இருப்பதால் கிராமப்புற மக்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக தொடுகாடு ஊராட்சியில் செயல்படாத போர்வெல்களால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கு உட்பட்டு 526 ஊராட்சிகள் உள்ளன. மேலும், ஏராளமான குக்கிராமங்களும் உள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் இல்லாததால், குடிநீருக்காக தினமும் மக்கள் அலைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால், கூவம், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் கூட கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமப்புற ஊராட்சிகளில் குடிநீர் மற்ற தேவைகளுக்காக ஆங்காங்கே ஆழ்துளை குடிநீர் கைப்பம்புகள், சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே போய்விட்டதால் வறண்டு போய் கிடக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவை, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு மற்றும் பல ஊராட்சிகளில் கைப்பம்புகள், சின்டெக்ஸ் தொட்டிகள் செயல்படாமல் இருப்பது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் கிராம மக்கள் சுகாதாரமற்ற குடிநீரையே அருந்தி வருகின்றனர்.

* பொதுமக்கள் குற்றச்சாட்டு

கிராம மக்கள் கூறுகையில், சின்டெக்ஸ் தொட்டி, கைப்பம்பு உள்ளிட்டவைகளை 100 அடி ஆழம் போர்வெல் அமைத்து விட்டு 200 அடி என எழுதி பணம் எடுத்து விடுகிறார்கள். ஒரு சில நாட்கள் மட்டும் இயங்கிய குழாய்களில் அடுத்து தண்ணீர் வருவதேயில்லை. இதனால், இவை காட்சி பொருளாகவும், துருப்பிடித்தும் உள்ளன. எனவே குடிநீர் திட்டங்களுக்கு செலவு செய்யப்படும் நிதி முறையாக செய்யப்படுகிறதா என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: