முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உத்தரவு ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 5, 12, 19, மற்றும் ஜூலை 26 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி, முழு ஊரடங்கு மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

காந்தி சாலையில் உள்ள பட்டு ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை கடைகள், ராஜாஜி மார்க்கெட், ஜவகர்லால் மார்க்கெட், பூக்கடைச் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், பால் விற்பனை கடைகள் காலையில் திறந்து இருந்தன. இதனால் அதிக போக்குவரத்து இன்றி காஞ்சிபுரத்தில் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்த நிலையில் நேற்று திருக்காலிமேடு பகுதியில் சில கடைகள் திறந்து இருந்தன. இதனால் பொதுமக்கள் கூடுகின்ற நிலை ஏற்பட்டது. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.  இதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் திறந்திருந்த கடைகளை மூடி விட்டு சென்றனர்.   

Related Stories: