ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட உட்கட்சி மோதல்: துணை முதல்வரின் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜ குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி அவமதித்து விட்டதாக அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் ஆளும் காங்கிரசில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ குதிரைப்பேரம் நடத்துவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தினார். எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி தருவதாக பாஜ விலை பேசுவதாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்தது. ‘உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் பாஜ மீது பழி போடுகிறார்’ என பதிலடி தரப்பட்டது.

இதற்கிடையே, எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்த முயற்சித்ததாக 2 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே புகார் கொடுத்துள்ள முதல்வர் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரத்தால் தற்போது காங்கிரசின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ‘‘மாநில கட்சி தலைமை பைலட்டை மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறது. தற்போது விசாரணைக்காக துணை முதல்வருக்கே நோட்டீஸ் அனுப்பி, அனைத்து எல்லையையும் கடந்து விட்டனர்.

இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வரின் அனுமதி இல்லாமல் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது. இது துணை முதல்வரை அவமானப்படுத்துவதாகும். எனவே இனியும் முதல்வர் கெலாட்டின் கீழ் பணியாற்ற முடியாது’’ என சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம் நிலவி வரும் நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்தது. முதல்வர் கெலாட் கூட்டிய இக்கூட்டத்தில், கட்சி விவகாரங்கள் மற்றும் பாஜவின் குதிரைப் பேரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மேலிட பார்வையாளர்கள்

ராஜஸ்தான் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை தீர்க்க, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மாக்கன், கட்சியின் தலைமை தகவல் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலே ஆகியோர் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று ஜெய்ப்பூர் சென்று, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்து கேட்க உள்ளனர்.

* பதவி கிடைக்காததே மோதலுக்கு காரணம்

ராஜஸ்தானில் கடந்த 2018ல் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் 107 எம்எல்ஏக்களைப் பெற்ற காங்கிரஸ், சுயேச்சை உட்பட உதிரிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அப்போது, இளம் தலைவரான சச்சி–்ன் பைலட்டுக்கு முதல்வர் பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர் என்ற முறையில் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்தார். துணை முதல்வரான சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களான சுமார் 25 எம்எல்ஏக்களும் கெலாட் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறப்படுகிறது. இந்த உட்கட்சி பூசலை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பாஜவும் திட்டம் தீட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. எனவேதான், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளது.

* மபி போல் ஆகக்கூடாது

டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட் நேற்று மாலை கட்சித் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதே போல, கெலாட் தரப்பிடமும் கட்சி தலைமை பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. சச்சினை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதே போன்ற நிலை ராஜஸ்தானிலும் ஏற்படக் கூடாது என்பதில் அக்கட்சி மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

* ‘கட்சியை நினைத்து கவலையாக இருக்கிறது’

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் கபில் சிபல், நேற்று தனது டிவிட்டரில், ‘கட்சியை நினைத்து கவலையாக இருக்கிறது. லாயத்தில் இருந்து அனைத்து குதிரைகளும் வெளியேறிய பிறகுதான் நாம் விழித்துக் கொள்வோமா?’ என வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: