கட்சியில், ஆட்சியில் மாற்றங்களை செய்ய மத்திய அமைச்சரவை கலைப்பு? பாஜ.வில் அதிரடி திட்டம்

புதுடெல்லி: கட்சியிலும், ஆட்சியிலும் இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், மூத்த தலைவர்களை கட்சிப் பணியில் ஈடுபடுத்தவும், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜ தலைமை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜ. தேசிய தலைவராக ஜே.பி. நட்டா கடந்த ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்ற உடன் நாடாளுமன்ற குழுவிற்கான தலைவர் பதவிகளில் இளைஞர்களை அமர்த்தி, அவர்களுக்கு பொறுப்பை வழங்க திட்டமிட்டு இருந்தார். இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக இந்த பணிகள் தள்ளிப்போட பட்டது.

நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்த பாஜ மூத்த தலைவர்களான ஆனந்த் குமார், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரது இடங்களும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் வெங்கையா நாயுடுவின் இடமும் காலியாக உள்ளது. எனவே, அந்த இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. சுஷ்மா சுவராஜ் ஒருவர் மட்டுமே நாடாளுமன்ற குழுவின் பெண் உறுப்பினராக இருந்தார். இதனால், தற்போது நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் அந்த இடத்துக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று பெரும்பாலான பாஜ மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, மத்திய அமைச்சரவை கலைக்கப்பட்டு, சிலருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கவும், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் மேலிடம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஆட்சியிலும், கட்சியிலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. அனைத்து மாவட்ட தலைவர்களும் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். அதே நேரம், பல மாநிலங்களில் இளைஞர்களே பாஜ மாநில தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நாடாளுமன்ற குழுவிற்கான புதிய தலைவர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் அறிவிக்க இருப்பதாக நம்பத்தகுந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: