திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை: செயல் அலுவலர் தகவல்

திருமலை: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை ஆன்லைனில் 1,64,742 டிக்கெட், இலவச தரிசன டிக்கெட்டில்  85,434 என மொத்தம் 2,50,176 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்கள் உண்டியலில் ரூ.16.73 கோடியும் 100 கிராம் தங்க கட்டிகள் 20 காணிக்கையாக செலுத்தினர். 82,520 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். சவரத்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இதுவரை தொற்று ஏற்படவில்லை.

பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டது. இதுதவிர பக்தர்கள் கூடுதலாக  10 லட்சத்து 80 ஆயிரம் லட்டுகள் ரூ.50 விலையில் வாங்கிச் சென்றனர். திருப்பதி, திருமலையில் 3,569 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 91 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரேஇடத்தில் தங்கியிருந்து பணி செய்வதால் தான் கொரோனா பரவுகிறது. எனவே, அதிரடிப்படை போலீசார், பிரசாதங்கள் தயார் செய்யக்கூடிய ஊழியர்களுக்கு தனித்தனி அறைகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் இருந்த தலைமுடி விற்பனை செய்யப்பட்டது. இதில், ரூ.37 கோடி 23 லட்சம் கிடைத்தது. செப்டம்பரில் பிரமோற்சவம் நடத்துவது குறித்து ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவெடுக்கப்படும். தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: