90 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்: பட்டியலுடன் சென்ற அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் 90 ஐபிஎஸ் அதிகாரிகள் 10 நாட்களில் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் 90 ஐபிஎஸ் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு புதிய அதிகார மையமாக உருவாகி இருக்கும் அதிமுகவின் தேர்தல் ஆலோசகர் சுனில் மற்றும் ஓய்வுபெற்ற உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதனால், ஆளும் தரப்பு தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை அவரவர்கள் மாவட்டத்துக்கு நியமிக்கும் வகையில் அதிமுக தலைமை முடிவு செய்தது. அதன்படி, அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் மேலிடம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் தங்களுக்கு வேண்டிய மற்றும் மாவட்டத்துக்கு சாதகமான ஐபிஎஸ் அதிகாரிகள் யார், யார் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கும் படி உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட செயலாளர்கள் தயாரித்த பட்டியலை அதிமுக மேலிடத்துக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். அப்போது, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள் கொண்டு வந்த பட்டியலை சென்னையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை நேரில் சந்தித்து அளிக்கும் படி கூறியதாக தெரிகிறது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் பட்டியலை எடுத்து கொண்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை நேரில் சந்தித்து அளித்தனர்.

ஆனால் கமிஷனரை மாடியில் சந்தித்து விட்டு கீழே வந்த 15 நிமிடத்துக்குள் மாநிலம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கான பட்டியல் வெளியாகி விட்டது. தங்களது பட்டியலில் உள்ள யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக கமிஷனரை சந்திக்க சொல்லி அவமானப்படுத்த வேண்டும் என கடும் கோபத்தையும் அதிருப்தியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். போலீஸ் அதிகாரிகள் மாற்றத்தில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுக தலைமை மீது கோபம் அடைந்ததால், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமை டிஜிபி திரிபாதி, சட்ட ஓழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோரை அழைத்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு 1.30 மணி நேரம் நீட்டித்தது. அப்போது, சில அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு, காவல் அதிகாரிகள் இரண்டு பேரும் தற்போதுள்ள சூழலில் உடனே அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தால், பலருக்கு சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அது விமர்சனத்துக்கு ஆளாகும். சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இப்போது எந்த மாற்றமும் வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே உளவு பிரிவு அதிகாரியாக இருந்து  ஓய்வு பெற்ற சத்தியமூர்த்தியின் கீழ் பல ஆண்டுகளாக உளவுத்துறை எஸ்பியாக பாண்டியன் செயல்பட்டு வந்தார். சத்தியமூர்த்திக்கும் பாண்டியனுக்கும் ஒத்துப்போகாது.

இதனால், அவர் முக்கியத்துவம் இல்லாத சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது பதவி உயர்வு பெற்று டிஐஜியாக உள்ளார். பல ஆண்டுகளாக உளவுப்பிரிவிலேயே இருந்த அவருக்கு தமிழக காவல் துறையில் முக்கிய பொறுப்பு வழங்காமல் ரயில்வே டிஐஜியாக தற்போது மாற்றப்பட்டுள்ளார். அதே போன்று, சத்தியமூர்த்திக்கு கீழ் பணியாற்றிய சரவணன் உளவுத்துறையில் உள்நாட்டு பாதுகாப்பு எஸ்பியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவரையும், சத்தியமூர்த்திக்கு பிடிக்காது. நெல்லையில் சரவணன் பணியாற்றிய போது சிறப்பாக பணியாற்றியதாக முதல்வரே தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில், அவருக்கும் முக்கிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற ஐஜி சத்தியமூர்த்தி முதல்வருக்கு நெருக்கமானவர். தேர்தல் ஆலோசகரான சுனில் பாஜவுக்கு மிகவும் வேண்டியவர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் நேரடி தொடர்பில் உள்ளவர். இதனால் இந்த புதிய அதிகார மையத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: