மதுபானம் கடத்தி விற்க முயன்ற ஊர்க்காவல் படை வீரர் கைது: பைக், மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவொற்றியூர்: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை முழுவதும் டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இதனால், சென்னையில் உள்ள குடிமகன்கள் மதுபானம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதை பயன்படுத்தி சிலர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபானங்களை கடத்தி வந்து, சென்னையின் பல பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனை நடத்தி, மதுபானம் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். ஆனாலும்,  இந்த சட்டவிரோத மதுபான விற்பனை குறைந்தபாடில்லை. காவல் துறை அதிகாரிகள் சிலர், கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருப்பதால் இந்த மதுபான கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் 200 மடங்கு கூடுதலாக விற்கப்படுகிறது. குடிமகன்களும் வேறு வழியின்றி இதை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில், ஊர்க்காவல் படை வீரர் ஒருவரே மதுபானம் கடத்தி விற்க முயன்றபோது, போலீசாரிடம் பிடிபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவரது பைக்கை சோதனை செய்தனர்.

அப்போது, அதில் 18 குவாட்டர் மதுபான பாட்டில்கள் இருந்தன. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் (27) என்பதும், கடந்த 2016ம் ஆண்டில் இருந்து காவல்துறையில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி, பைக்கில் கடத்தி வந்து, தங்களது பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: