×

கடை நடத்த மாமூல் கேட்டு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது பெண் வியாபாரி புகார்

சென்னை: சாலிகிராமம் பகுதியில் சூப் கடை நடத்தி வந்த பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக இளம் பெண்கள் பாசறை நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் எஸ்.கே.பாபு தெருவை சேர்ந்தவர் சுசீலா (34). இவர், கடந்த சில நாட்களாக ஆற்காடு சாலை ஓரமாக தள்ளுவண்டியில் “சூப்” வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணியளவில் இவரது கடைக்கு வந்த சாலிகிராமம், தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளம்பெண்கள் பாசறை நிர்வாகி குமார் என்பவர் ‘யாரை கேட்டு இங்கு நீ சூப் கடை நடத்துகிறாய். இந்த பகுதிகளில் கடை போட வேண்டும் என்றால் என்னை கவனிக்க வேண்டும்’ இல்லையென்றால் இந்த பகுதியில் கடை போட முடியாது என்றும், நான் நாளை வரும்போது இங்கு கடை இருக்க கூடாது என்றும் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சுசீலா, சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அதிமுக இளம்பெண்கள் பாசறை நிர்வாகி குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : trader ,AIADMK ,shop , Shop, routine listening, intimidation, AIADMK, female dealer, complaint
× RELATED குட்கா விற்ற வியாபாரி கைது