சித்த மருத்துவ மையத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

பெரம்பூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ மையம் செயல்படுகிறது. 230 படுக்கை வசதி கொண்ட இந்த மையத்தில், 6 சித்த மருத்துவர்கள், 3 அலோபதி மருத்துவர்கள், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் என தலா 2 செவிலியர்கள் பணியில் உள்ளனர். நோயாளிகளுக்கு உதவி புரிவதற்காக 12 பணியாளர்களும் உள்ளனர். இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சையோடு, யோகா, வர்ம பயிற்சி என பல்வேறு வகை சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அதோடு நெல்லிக்காய் சாறு, கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை குடிநீர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 208 பேர் இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில்,  24 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மேலும் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவர்கள், செவிலியர்கள் கைத்தடி உற்சாகமாக அவர்களை வழியனுப்பி வைத்தனர். மீதம் உள்ளவர்களில் 32 பேர் வீட்டில்  இருந்தபடி சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இந்த மையத்தில் 110 பேர்  சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவம் நல்ல பலன் அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: