மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் 18 ஊழியர்களுக்கு தொற்று உறுதி: சுய தனிமையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யரி

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் 18 பேருக்கு கொரோனா உறுதியானதால், கவர்னர் பகத்சிங் கோஷ்யரி, தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாட்டில் மிக அதிகளவு கொரோனா பரவல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வருகிறது. பிரபலங்களும் கொரோனாவிற்கு தப்பவில்லை. நேற்று முன்தினம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதியாகி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணியாற்றி வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. உடனே அங்கு பணியில் உள்ள 100 பணியாளர்களும் பரிசோதனை மேற்கொண்டனர். அதன்முடிவு நேற்று வெளியானது. அதில், 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கவர்னர் பகத் சிங் கோஷ்யரி, தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியில் இருந்து ஆளுநர் மாளிகைக்குள் யாரும் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கிருமிநாசினி உள்ளிட்ட மருந்து தெளிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மட்டும் மகாராஷ்டிராவில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 2,46,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகமுள்ள புனேவில், ஊரடங்கு காலம் வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: