சுற்றுலாத்துறையில் டெண்டர் பணிகளை முடிப்பதற்காக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் பணிக்கு வர வேண்டும் என்று நெருக்கடி

* கட்டாயம் இரவு வரை பணியாற்ற வேண்டும்

* ஊழியர்கள் அச்சம்

சென்னை: சுற்றுலாத்துறையில் டெண்டர் பணிகளை முடிப்பதற்காக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு வர வேண்டும் நெருக்கடி கொடுத்து வருவது துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் வாலாஜா சாலையில் சுற்றுலாத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், இளநிலை உதவியாளர், உதவியாளர், மேலாளர் உதவி சுற்றுலா அலுவலர், துணை சுற்றுலா அலுவலர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சுற்றுலாத்துறை மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுலாதலங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படுகிறது.

இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். மேலும், இந்த அலுவலகங்களில் இருந்து தான் சுற்றுலா வளர்ச்சி பணிகள் நிதி ஒதுக்கீடு, டெண்டர் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோயில்கள் மற்றும் பல்வேறு சுற்றுலாதலங்களில் ஓட்டல், லாட்ஜ் கட்டுவதற்கான டெண்டர் விடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சுற்றுலாத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 5 பேர் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், தங்களது வீடுகளில் ஓய்வில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியவர்களை டெண்டர் தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனக்கூறி ஓய்வில் இருப்பவர்களை அலுவலகத்துக்கு வருமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் தொடர்பான வேலைகளை செய்யுமாறு உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், அவர்கள் தினமும் பணிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பணிக்கு வந்தவர்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பணியாற்றும் பட்சத்தில் அவர்கள் உடல்நிலை பலவீனமடைந்து மீண்டும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Stories: