மருத்துவ மாணவர்கள் விவகாரம் மத்திய சுகாதார அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி எழுதிய கடிதம்: வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வை தேசிய தேர்வு வாரியம் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய இந்தத் தேர்வு கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை கடந்த ஜூலை 8ம் தேதி தொடங்கியது. ஆனால், இத்தேர்வில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு வாரியம் மாற்றியமைத்திருப்பதால், இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு ஆர்வத்துடன் காத்திருந்த மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் நிரந்தரப் பட்டச் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் தான் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளை எழுத முடியும் என்ற தேசிய தேர்வு வாரியத்தின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, தற்காலிகப் பட்டச் சான்றிதழ் இருந்தாலே இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்று அறிவிக்க வேண்டும். இந்திய மாணவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு வாரியத்திற்கு வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: