கொரோனா வைரஸை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள கருங்கோழிக்கு கடும் கிராக்கி: இறைச்சி கிலோ ரூ.1,000க்கு விற்பனை

பரமக்குடி: நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டதாக கூறி பரமக்குடியில் கருங்கோழி இறைச்சி கிலோ ரூ.1000க்கு விற்பனையாகிறது. கொரோனா வைரசை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிக அவசியம். எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவு வகைகளை மக்கள் நாடி செல்கின்றனர். இறைச்சிகளில் கருங்கோழியில் புரத சத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் கருங்கோழிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மக்கள் சாதாரண கோழிக்கறிக்கு பதிலாக கருங்கோழியை அதிகளவில் வாங்கி சாப்பிட துவங்கியுள்ளனர். இதனால் விலை எக்குத்தப்பாக எகிறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிலோ ரூ.450க்கு விற்கப்பட்ட கருங்கோழி இறைச்சி, தற்போது கிலோ ரூ.1,000ஐ தொட்டுள்ளது. ஜனவரி மாதம் வாரத்தில் ஒரு கோழி அல்லது இரண்டு கோழிகள் மட்டுமே விற்பனையானது. தற்போது ஒவ்வொரு வாரமும் 300 கோழிகள் வரை விற்பனையாகிறது. அதேபோல் ரூ.15க்கு விற்ற கருங்கோழி முட்டை ரூ.25 ஆக விலை உயர்ந்துள்ளது. இயற்கை உணவுகள் அளித்து வளர்ப்பதால், கருங்கோழியில் அதிக சத்து இருப்பதாக கோழி வளர்ப்போர் கூறுகின்றனர்.

Related Stories: