×

முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் 60 வயது மூதாட்டியை சாலையில் தவிக்க விட்டு சென்ற பரிதாபம்: போலீசார் மீட்டு அனுப்பி வைத்தனர்

சேலம்: சேலத்தில் முதியோர் இல்லத்தில் இருந்த 60 வயது மூதாட்டியை அழைத்து வந்து சாலையில் தவிக்க விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 60 வயது மூதாட்டி ஒருவர், கையில் பையுடன் உலாவி கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, தன்னை சிலர் நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றதாக தெரிவித்தார். விசாரணையில், அவர், சேலம் தீவட்டிப்பட்டியை சேர்ந்த ரத்தினம்மாள்(60) என்பதும், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள பழக்கடையில் வேலை செய்ததும் தெரியவந்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்தும் வீட்டிற்கு ெசல்ல வழி தெரியாததால், அவரை சமூக நலத்துறையினர் மீட்டு, ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு  ஏற்கனவே பணம் கொடுத்து தங்கியிருந்த மூதாட்டிக்கும், ரத்தினம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை முதியோர் இல்ல நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால், கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லுமாறு ரத்தினம்மாள் கூறியுள்ளார். இதன்பேரில், நேற்று முதியோர் இல்ல நிர்வாகிகள் ரத்தினம்மாளை அழைத்து வந்து, கலெக்டர் அலுவலகம் அருகே ரோட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட முதியோர் இல்ல நிர்வாகியை அழைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரத்தினம்மாள் இல்லத்தில் தங்கி உள்ள மற்றவர்களிடம் தேவையில்லாமல் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாலும் அழைத்து வந்து விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். சமூகநலத்துறை மூலம் சேர்க்கப்பட்ட மூதாட்டியை, எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் சாலையில் விட்டு சென்றதை போலீசார் கண்டித்தனர். தொடர்ந்து, அந்த மூதாட்டியை வேறு முதியோர் இல்லத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

Tags : road ,nursing home , Retirement home, 60-year-old grandmother, road, awful, police
× RELATED விலை உயர்ந்த கார்களை ஏமாற்றி விற்ற பெண் கைது