×

தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகளுக்கு சர்வதேச தீவிரவாதிகள் மிரட்டல்: ஐபி, ரா உள்பட 5 அமைப்புகள் விசாரணை; கைதான சொப்னாவுக்கு 14 நாள் காவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க ராணி சொப்னா சுரேஷ் சம்பந்தப்பட்ட தங்கம் கடத்தல் வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகளுக்கு சர்வதேச தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடத்தல் விவகாரத்தை மத்திய உளவுத் துறைகளான ரா, ஐபி உள்ளிட்ட 5 அமைப்புகள் விசாரிக்க தொடங்கியுள்ளன. மேலும், கைதான சொப்னா உட்பட 2 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதாக, தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் கைதானார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷை கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் நாயரும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் பெங்களூருவில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இருவரிடம் இருந்து தங்க கடத்தல் குறித்து பல்வேறு முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் கேரள என்ஐஏ அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் தனித்தனி கார்களில் என்ஐஏ அதிகாரிகள் சேலம், கோவை, வாழையார் வழியாக கொச்சிக்கு கொண்டு சென்றனர். அப்போது, கேரள எல்லையான வாழையாரில் இருந்து கொச்சி வரை பல்வேறு பகுதிகளில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி. முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வலியுறுத்தினர் மதியம் ஒரு மணியளவில் எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அரசு மருத்துவமனைக்கு சொப்னாவும், சந்தீப் நாயரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

 பின்னர் 2.30 மணியளவில் இருவரும் கொச்சி என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, என்ஐஏ அலுவலகம் அருகேயும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். சொப்னா சுரேஷ் கார் வந்ததும் அந்த காரை முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். கொச்சி என்ஐஏ தலைமை அலுவலகத்தில் அவர்களிடம் என்ஐஏ, மத்திய உளவுத்துறை அமைப்புகளான ரா, ஐபி, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்க இலாகா மற்றும் அமலாக்கத் துறை ஆகிய 5 விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தின. பின்னர், 4.30 மணியளவில் இருவரும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்திற்கு விடுமுறையாக இருந்த போதிலும் இது முக்கிய வழக்கு என்பதால் நீதிபதி கிருஷ்ண குமார் விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்தார்.

இதையடுத்து, நேற்று விசாரணை நடத்தது. பின்னர், இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரையும் கொரோனா நல மையத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சந்தீப் நாயர் கொச்சியில் உள்ள மையத்திற்கும், செப்னா சுரேஷ் திருச்சூரில் உள்ள மையத்திலும் தங்க வைக்கப்பட்டனர். இரு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை வருவதை பொறுத்து இருவரிடமும் நேரில் விசாரணை நடத்த என்ஐஏ முடிவு செய்துள்ளது. கொரோனா இல்லை என்று முடிவு வந்தால் உடனடியாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிப்பார்கள். கொரோனா இருந்தால் சிகிச்சை முடிந்த பின்னரே விசாரணை நடத்தப்படும்.  
 என்ஐஏ அதிகாரிகளுக்கு மிரட்டல் போன்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு  தான் என்ஐஏ ஏற்றுக்கொண்டது.

ஏற்கனவே, இந்த கடத்தல் வழக்கில் சர்வதேச தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நேற்று கொச்சியில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் சிலருக்கு அவர்களின் செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், ‘ தங்கம் கடத்தல் வழக்கை இத்துடன் விட்டுவிட வேண்டும், இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்,’ என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அது, இன்டர்நெட் மூலம் அழைக்கப்பட்ட கால் என்பதால் அந்த நபர் எந்த நாட்டில் இருந்து பேசினார் என்பது தெரியவில்லை. அவர்கள் சர்வதேச தீவிரவாத அமைப்பின் பெயரை கூறி, இந்த மிரட்டலை விடுத்துள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டல் பற்றி தீவிர விசாரணை நடைபெற்று  வருகிறது.

* சொப்னா கார் பஞ்சர்
பெங்களூருவில் இருந்து சொப்னா சுரேஷூம், சந்தீப் நாயரும் தனித்தனி கார்களில் அழைத்து வரப்பட்டனர். கேரள மாநிலம், வடக்கான்சேரி அருகே வந்து கொண்டிருந்த போது சொப்னா சுரேஷ் வந்த கார் திடீரென பஞ்சரானது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சொப்னா சுரேஷை என்ஐஏ அதிகாரிகள் அதில் இருந்து இறக்கி சந்தீப் நாயர் வந்த காரில் ஏற்றி அழைத்து வந்தனர்.

* முன்னாள் செயலாளர் சஸ்பெண்ட்?
சொப்னா சுரேஷூடன் தொடர்பில் இருந்த முதன்மை செயலாளரும் ஐடி துறை செயலாளருமாக இருந்த சிவசங்கர் பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டார்.சுங்க இலாகாவினர் நடத்திய விசாரணையில் சொப்னா சுரேஷூடன் சிவசங்கருக்கு இருந்த தொடர்புகள் குறித்து மேலும் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது பிளாட்டில் சுங்க இலாகாவினர் சோதனை நடத்தினர். இதில் சிவசங்கருக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து என்ஐஏவும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து சிவசங்கரை சஸ்பெண்ட் செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது.

* தங்கத்தின் நிறம் ‘சிவப்பு’
கேரளாவின் காசர்கோட்டில் பாஜ அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், ‘‘நமக்கெல்லாம் தங்கத்தின் நிறம் மஞ்சள். ஆனால், கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் ‘சிவப்பு’ (ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிறத்தை குறிப்பிட்டார்). இந்த கடத்தலுக்கும் முதல்வர்  அலுவலகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. கேரளாவின் இடதுசாரி அரசு திறனற்ற,  ஊழல் மிகுந்த வன்முறை மீது நம்பிக்கை கொண்டது. ஆளும் மார்க்சிஸ்ட்  தலைமையிலான எல்டிஎப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் இரண்டுமே ஒரு நாணயத்தின்  இருபக்கங்கள் போன்றவை,’’ என்றார்.

* தங்கம் வாங்கியவர் கைது
இந்த தங்கம் கடத்தல் சம்பவத்தில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரமீஸ் என்பவரை சுங்க இலாகாவினர் கைது செய்தனர். சொப்னா சுரேஷிடம் இருந்து இவர்தான் கடத்தல் தங்கத்தை வாங்கி உள்ளார். இதை மலையாள சினிமா விநியோகம் செய்ய பயன்படுத்தி உள்ளார். சில மலையாள சினிமா தயாரிப்பாளர்களுக்கும் இவர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Tags : terrorists ,organizations ,NIA ,Sopna , Gold smuggling, case, NIA officer, international terrorists, intimidation, IP, RAW, 5 organizations, investigation, Sopna, 14 days custody
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...