×

அருள்வாக்கு கூறும் மக்களுக்கு மரியாதை; செருப்பை கைகளில் தூக்கி செல்லும் மக்கள்: திருமங்கலம் அருகே நெகிழ்ச்சி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் தெருவில், கிராம மக்கள் அனைவரும் செருப்புகளை அணியாமல் கைகளில் தூக்கி செல்கின்றனர். கம்பளத்து நாயக்கர் சமூக மக்கள் அருள்வாக்கு கூறி வருவதால் 50 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பழக்கத்தை கடைபிடித்து வருவதாக காங்கேயநத்தம் கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள காங்கேயநத்தம் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

முற்றிலும் விவசாயம் சார்ந்த இந்த கிராமத்தில் உள்ள ஒரு தெருவிற்குள் மட்டும் கிராம மக்கள், வெளியூர் மக்கள் அனைவரும் ஒருவித பக்தியுடனே சென்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இத்தெருவில் கம்பளத்துநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இத்தெருவுக்குள் செல்லும் போது மட்டும், மக்கள்  செருப்புகளை அணியாமல், கைகளில் எடுத்து செல்கின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘காங்கேயநத்தம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கம்பளத்துநாயக்கர் சமூக மக்கள் பசுக்களுக்கு தொழுவம் அமைத்து தெய்வமாக வழிபட்டனர்.

மாட்டுத்தொழுவம் தெய்வம் வசிக்கும் பகுதி என்பதால் நாங்கள் யாரும் செருப்பு அணிவதில்லை. வேட்டியை மடித்து கட்டுவதில்லை. தோளில் துண்டு அணிவதில்லை. கம்பளத்துநாயக்கர் சமூக மக்கள் இன்றும் அருள்வாக்கு சொல்லுகின்றனர். இவர்களிடம் வாக்கு கேட்க வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்களும் செருப்புகளை கைகளில் எடுத்துக் கொண்டு, இந்த தெருவுக்கு வருகின்றனர்’’ என்றனர். அரசு அதிகாரிகளும் இந்த கிராமத்தில் கம்பளத்துநாயக்கர் சமூக மக்களிடம்தான் முதலில் வரி வசூலிக்கின்றனர். அதன் பின்னரே கிராம மக்களுக்கு வரி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : wedding ,Thirumangalam , Blessings, shoes, people, Thirumangalam
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி