×

பூவிருந்தவல்லியில் கொரோனா தொற்று பரவும் அபாயம்!: சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னை: சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து இந்த கழிவுகள் இரவு நேரங்களில் சென்னீர் குப்பம் அருகே கூவம் ஆற்று கரையோரம் கொட்டுவதாக கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் கொட்டப்படும் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வரும் கரும்புகை பல்வேறு நோயை உண்டாக்கும் வகையில் உள்ளது. மேலும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுகள் கூவம் ஆற்றில் கலப்பதால் அதில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகள் அவதிக்குள்ளாகின்றன. சென்னீர் குப்பம் ஊராட்சியில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவ கழிவுகளால் கொரோனா தொற்று மேலும் பரவும் ஆபத்து இருப்பதாக ஊர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களில் இருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கழிவுகள் முறையாக அகற்றப்படாதது கொரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Poovirunthavalli , Poovirunthavalli, corona, medical waste, public
× RELATED நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில்...