×

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்!: ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு

மயிலாடுதுறை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், திருநெல்வேலியை  பிரித்து தென்காசி, விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, வேலூரை பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு என புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம் மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களுக்கு செல்ல முக்கிய இணைப்பு புள்ளியாக மயிலாடுதுறை இருக்கிறது. எனவே மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து கடந்த ஏப்ரல் 7ம் தேதி அரசாணையை வெளியிட்டது. மேலும் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38வது மாவட்டமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தலாம் என 4 வட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தற்போது புதிய சிறப்பு அதிகாரியாக ஆர்.லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாதா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டிருக்கிறார். சிறப்பு அதிகாரி மற்றும் எஸ்.பி. நியமிக்கப்பட்டிருப்பதால் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாக பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

Tags : Special Officer ,Lalitha ,Mayiladuthurai District ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,IAS ,Mayiladuthurai , Mayiladuthurai, Special Officer, IAS Officer, Lalitha, Government of Tamil Nadu
× RELATED புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை...