×

கொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் தகவல் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் எழுந்துள்ள சவால்கள், மக்களின் முன்னுரிமைகள் குறித்து அறிவதற்காக குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்குகிற ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, நாடு முழுவதும் ஒரு சர்வே நடத்தி உள்ளது.

இதில் கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரையில், இந்தியா முழுவதும் 7,235 குடும்பங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. மேலும் வட பிராந்தியத்தில் 3,827 குடும்பங்களும், தென் பிராந்தியத்தில் 556 குடும்பங்களும், கிழக்கு பிராந்தியத்தில் 1,722 குடும்பங்களும், மேற்கு பிராந்தியத்தில் 1,130 குடும்பங்களும் இதில் பங்கேற்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் 62 சதவீத வீடுகளில் உள்ள குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளனர். இது சர்வேயில் பங்கேற்ற மொத்த குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்கு ஆகும். மேலும் 5-ல் 2 பங்கு குடும்பத்தினரின் குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவு பெறவில்லை. மேற்கில் 52 சதவீதத்தினரும், வடக்கில் 39 சதவீதத்தினரும், தெற்கில் 38 சதவீதத்தினரும், கிழக்கில் 28 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை. நகர்ப்புறம், கிராமப்புறம் என பார்க்கிறபோது, நகர்ப்புறங்களில் 40 சதவீதத்தினரும், கிராமப்புறங்களில் 38 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை என தகவல் பரவியது.

இந்த நிலையில் 5-ல் 2 பங்கு குடும்பத்தினர், குழந்தைகளின் கல்விக்காக எந்தவிதமான கல்வி உதவியை பள்ளிக்கூடத்திலோ, கல்வித்துறையிலோ பெறவில்லை என தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் 42 சதவீத குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 40 சதவீத வீடுகளிலும் எந்த கல்வி உதவியையும் பெறவில்லை. இந்த சர்வே முடிவுகள் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை எந்த கருத்தும் உடனடியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : children ,Corona ,Survey , Corona, curfew, poverty, children
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...