உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு!: இந்தமாதம் இறுதிவரை பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை..தொழிற்சங்கங்கள் தகவல்.!!!

சென்னை: தமிழகத்தில் ஜூலை 16ம் தேதி முதல் அரசு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே ஜூலை மாத இறுதிவரை  பேருந்துகள் இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பொது போக்குவரத்து என்பது 4 மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. அதாவது தமிழகத்தில் இதுவரை  கொரோனாவால் 1,34,426 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றாலும் சிகிச்சையில் குணமாகி 85 ஆயிரத்து 915 பேர் வீடு திரும்பிவிட்டனர். மேலும் 46 ஆயிரத்து 410 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு என்பதும் 1898 ஆகவும் உயர்ந்துவிட்டது. எனவே தான் 6ம் கட்ட ஊரடங்கு என்பது இந்த மாத இறுதிவரை அதாவது ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கின்றது. அதேநேரத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும்  கூட பொது போக்குவரத்து என்பது இன்னும் முடங்கியே கிடக்கிறது. பேருந்துகள் இயக்கப்படவில்லை, அதேநேரத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய கோவில்கள் போன்றவையும் மூடி கிடக்கின்றன. சென்னையை பொறுத்தவரை  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனால் அதேநேரத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் ஜூலை 15ம் தேதி வரை தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது என்று அரசு அறிவித்தது. எனவே 16ம் தேதியிலிருந்து  பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? என்பது தான் மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஜூலை 16ம் தேதி முதலும் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த  நேரத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

ஆனால் பேருந்துகள் ஓடியும் பொதுமக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. இதனால் பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பேருந்துகளை 16ம் தேதி முதல் ஓட்டுவதா?  வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது தொழிற்சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்படும் தகவலை அடிப்படையாக  வைத்து பார்க்கும்போது சென்னைக்கு நிகராக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக 16ம் தேதிக்கு பிறகும் அரசு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் இல்லை.

எனவே இந்த மாதம் இறுதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னரே ஆம்னி பேருந்துகளை ஓட்டுவதா? வேண்டாமா?  என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர். எனவே 14ம் தேதி நடைபெறக்கூடிய அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த கூட்டத்தில் பேருந்துகள் இயக்கம் குறித்து  முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளும் உருவாகியிருக்கின்றன.

Related Stories: