×

பழைய நடைமுறைகள்; தளர்வுகள் தொடரும்: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!!!

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்றுடன் முடியவிருந்த முழு ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, வேலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 6077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 111 உயிரிழந்த நிலையில், 1803 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும்  திருப்பரங்குன்றம்  ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு 06.07.2020 அன்று அதிகாலை முதல் 12.7.2020  நள்ளிரவு 12.00 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்  தொற்று குறைந்திருப்பினும்,  கொரோனா நோய் தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி,  மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட  கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 2 நாட்களுக்கு, அதாவது 13.7.2020 அதிகாலை முதல் 15.7.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்க   உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய நடைமுறைகள்; மற்றும் தளர்வுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊரடங்கு பகுதியில், பஸ் போக்குவரத்து முற்றிலும் இருக்காது. ஆட்டோ, டாக்ஸிக்கள் செல்ல அனுமதி இல்லை. ஊரடங்கு பகுதியில், பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதி  உண்டு. டாஸ்மாக் உட்பட அத்தியாவசியம் இல்லாத கடைகள் திறக்க அனுமதி இல்லை. அதேபோன்று எந்த மாவட்டத்திற்குள் இருந்தும், மதுரைக்குள் வரவும் இ-பாஸ் அனுமதி இல்லை. மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : area ,Madurai Corporation , பழைய நடைமுறைகள்; தளர்வுகள் தொடரும்: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!!!
× RELATED லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு மாநகராட்சியில் துவக்கப்படுமா?