நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு!!!

கடலூர்: கடலூர் நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக மே மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2வது அனல்மின் நிலையத்தில் கடந்த ஒன்றாம் தேதி கொதிகலன்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் 6 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனல்மின் நிலையம் முன்பு அமர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, இதுபோன்ற தொடர் தீவிபத்திற்கு காரணம் பாதுகாப்பு விஷயத்தில் என்.எல்.சி நிர்வாகம் காட்டிய அலட்சியமமே என பல்வேறு தொழிற்சங்கங்களும், தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு லேசான தீக்காயங்கள்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தொடர்ச்சியாக அடுத்தடுத்த உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த மற்றொரு ஊழியரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் என்.எல்.சி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: