விருதுநகரில் செயல்பட்டு வந்த அம்மா உணவக சமையலருக்கு கொரோனா உறுதி!: தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக உணவகம் மூடல்!!!

விருதுநகர்: விருதுநகரில் செயல்பட்டு வந்த அம்மா உணவக சமையலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், விருதுநகரில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, தற்போது கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 943ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 784ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட அதிகாரிகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிவகைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் ரயில்வே பீடர் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உணவகத்தில் பணிபுரிந்து வந்த சமையலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மற்ற ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, உணவகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியாக உணவகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பின்னர், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: